உள்ளம் வருந்தாதே; என்று அறியக் கூறுவான் - என்று தெளிவாகக் கூறிக் கொண்டு (வந்து); சந்த மென் தளிர் புரை சரணம் - அழகிய மென்மையான தளிரை ஒத்த (இராமனது) திருப்பாதங்களில்; சார்ந்தனன் - விழுந்து வணங்கினான்; சிந்தின நயனம் வந்தனைய செய்கையான் - (அது கண்ட இராமன்) இழந்த கண்கள் மீண்டும் வந்தது போன்று (மகிழ்ச்சிச்) செய்கை உடையவனானான். இலக்குவன் தன்னைத் தேடி வந்த இராமனை நெருங்கி அவனுடைய தாமரைத் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினான். அவனைத் தன் கண் போல் எண்ணியிருந்த இராமன் (3607 ஆம் பாடல் காண்க) இழந்த கண்ணைப் பெற்றவன் போல் மகிழ்ந்தான். இராமனின் கணையாழியைப் பெற்ற சீதையின் மகிழ்ச்சியைக் கூறவந்த கவிஞர் சுந்தர காண்டத்தில் இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள், பழந்தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்; குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள் உழந்து விழி பெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள் (5292) என்ற பாடலை இதனோடு ஒப்பு நோக்கிக் காண்க. அந்தம் - அழிவு; ஈண்டு அஞ்ஞான இருளாகிய மயக்கத்தால் ஏற்படும் அழிவைச் சுட்டி வந்தது. சந்தம் - அழகு. "திருநாவுக்கரசெனும்பேர் சந்தமுற வரைந்ததனை எம்மருங்கும் தாம் கண்டார்" எனத் திருத்தொண்டர் புராணத்தில் (பெ. பு. 1793) உள்ள அப்பூதியடிகள் நாயனார் புராணத்தில் வருவதைக் காண்க. புரை - ஒப்பு கரணம் - பாதம். சிந்தின - இழந்த. வாழி - அசை. 83 3624. | ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன், ஈற்று இளங் கன்றினைப் பிரிவுற்று, ஏங்கி நின்று, ஆற்றலாது அரற்றுவது, அரிதின் எய்திட, பால் துறும் பனி முலை ஆவின் பான்மையான். |
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் -(இலக்குவனைப் பிரிந்ததால்) ஊற்றுப் போல மிகுதியாக கண்களில்இருந்து கண்ணீர் வெளிப்பட்டு பெருக நின்றவனாகிய இராமன்; ஈற்றுஇளங் கன்றினைப் பிரிவுற்று - ஈன்ற (தன்) இளமையான கன்றினைப்பிரிந்து; ஏங்கி நின்று - மிக வருந்தி நின்று; ஆற்றலாது அரற்றுவது- (அதை) ஆற்றிக் கொள்ள முடியாது ஒலி செய்யும் (நிலையில்);அரிதின் எய்திட - அந்தக் கன்று தானே வந்து சேர; பால் துறும்பனி முலை - (அக் கன்றைக் கண்ட மகிழ்ச்சியாலும் பாசத்தாலும்)பால் வெளிப்படும் சோர்கின்ற மடியை உடைய; ஆவின்பான்மையான் - பசுவினது தன்மை உடையவன் ஆயினான். |