கண்ணீர் ஊற்றுப் போல் பெருக நின்றவனாகிய இராமன் ஈன்றணிமை பொருந்திய தன் கன்றைக் காணாத புனிற்றா அவலித்து அழுங்கும் போது, கன்று தானே வர அக் கன்றினைக் கண்டு முலை வழியே பால் சோர நிற்கும் பசுப் போன்ற தன்மை உடையவன் ஆயினன் என்க. உலக வழக்கிலும் நூல் வழக்கிலும் கசிவுறும் அன்புக்குக் கன்றுடைய பசுவை உவமை கூறுவது மரபு. துறும் - வெளிப்படும்; பனிமுலை - பால் சோர்ந்தமையால் குளிர்த்திருக்கும் பால்மடி. 84 இராமன் இலக்குவனைத் தழுவி, நிகழ்ந்தது கேட்டல் 3625. | தழுவினன் பல் முறை; தாரைக் கண்ணின் நீர் கழுவினன், ஆண்டு அவன் கனக மேனியை; 'வழுவினையாம் என மனக் கொடு ஏங்கினேன்; எழு என, மலை என, இயைந்த தோளினாய்! |
ஆண்டு - (இராமன் இலக்குவனை) அப்பொழுது; அவன் கனக மேனியை - அந்த இலக்குவனது பொன்னிற உடம்பை; பல்முறை தழுவினன் - பலமுறை தழுவினான்; தாரைக் கண்ணின் நீர் கழுவினன் - தாரையாக வடிகிற (தன்) கண்ணீரால் கழுவினான்; 'எழு என மலை என இயைந்த தோளினாய் - கணைய மரம் போன்றும் மலை போன்றும் பொருந்திய தோள்களை உடையவனே; வழு வினையாம் என மனக் கொடு ஏங்கினேன் - (நீ இவ்வளவு நேரம் வந்து சேராததால்) தவறிப் போய் விட்டாயோ? என்று மனத்தில் கருதி வருந்தினேன். (என இராமன் கூறினான்). தாரை - ஒழுங்கு, கனகம் - பொன், எழு - கணைய மரம். கனக மேனி - உவமைத்தொகை, கொடு - இடைக்குறை. 85 3626. | 'என்னை அங்கு எய்தியது? இயம்புவாய்' என, அன்னவன் அஃது எலாம் அறியக் கூறலும், இன்னலும், உவகையும், இரண்டும், எய்தினான் - தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான். |
'அங்கு எய்தியது என்னை - அங்கே நடந்தது என்ன?; இயம்புவாய் என - (நீ) சொல்லுவாய் என்று (இராமன் கேட்க); அன்னவன் - அந்த இலக்குவன்; அஃது எலாம் அறியக் கூறலும்- அவை எல்லாவற்றையும் |