(தெளிவாகத்) தெரிந்து கொள்ளுமாறு கூறிய உடன்; தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான் - தன்னைத் தவிர வேறு ஒரு பொருளும் தனக்கு மேல் என்று கூற இல்லாதவனாகிய (இராமன்); இன்னலும் உவகையும் இரண்டும் எய்தினான் - துன்பம், மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் ஒருங்கே அடைந்தான். நடந்தவற்றையெல்லாம் இலக்குவன் கூறக் கேட்ட இராமன் துன்பமும் மகிழ்ச்சியும் ஒருங்கே அடைந்தான். தம்பிக்கு நேரிட்ட இடர்ப்பாடு துன்பத்துக்கும் அவன் வெற்றியொடு மீண்டமை இன்பத்துக்கும் காரணமாம். தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான் இன்னலும் மகிழ்ச்சியும் அடைந்ததாகக் கூறுவது எற்றுக்கு எனின், பரம்பொருள் மானுட அவதார பாவனைக்கு ஏற்ப இவ்வாறு கூறப்பட்டது. அஃது எலாம் - ஒருமை பன்மை மயக்கம். இலான் - வினையாலணையும் பெயர். 86 3627. | 'ஆய்வுறு பெருங் கடல் அகத்துள் ஏயவன் பாய் திரை வருதொறும், பரிதற்பாலனோ? தீவினைப் பிறவி வெஞ் சிறையில் பட்ட யாம், நோய், உறு துயர் என நுடங்கல் நோன்மையோ? |
ஆய்வுறு பெருங் கடல் அகத்துள் ஏயவன் - (அளவில்லாதது என்று) ஆய்ந்து கூறுகிற பெரிய கடலின் நடுவில் கப்பலைச் செலுத்துபவன்; பாய்திரை வருதொறும் பரிதற் பாலனோ - பாய்கிற அலைகள் வரும் போதெல்லாம் வருந்துவதற்கு உரியவனோ? (அவ்வாறு வருந்துவதற்கு உரியவன் அல்லன் என்றபடி); தீவினைப் பிறவி வெஞ் சிறையில் பட்ட - தீவினையாகிய பிறவி என்கிற கொடிய சிறையில் அகப்பட்ட; யாம் - நாம்; நோய் உறுதுயர் என - வருத்தம் பொருந்திய துன்பம் என்று; நுடங்கல் - (மனம்) தளர்தல்; நோன்மையோ - பெருமையோ? (என்று இராமன் இலக்குவனிடம் கூறினான்). இன்னலும் உவகையும் அடைந்த இராமன், மனம் தேறி இவ்வாறு இலக்குவனுக்கு ஆறுதல் கூறினான் எனக் கொள்க. பிறவியாகிய பெருஞ்சிறைப்பட்ட நாம் வருந்தித் துன்புறுதலால் எந்தப் பயனும் இல்லை. எனவே, அரக்கி கையில் அகப்பட்ட துன்பத்துக்கு வருந்த வேண்டா என இராமன் கூறினான் என்க. வாழ்வியல் நெறி விளக்கமும் தத்துவ நயமும் செறிந்த பாடல் இது : ஏயவன் - அகப்பட்டவன் எனவும் பொருள் கூறலாம். பரிதல் - வருந்துதல், நோய் - வருத்தம். நுடங்கல் - தளர்தல். பாய் திரை - வினைத்தொகை. பிறவி வெஞ்சிறை உருவகம். 87 3628. | 'மூவகை அமரரும், மும்மை உலகமும் |
|