பக்கம் எண் :

720ஆரணிய காண்டம்

வடசொற் கலைக்கு எல்லை தேர்ந்தானும் (1741) ஆகிய
இராமபிரானால் தணிந்தது. இப்போது ஆரணியத்தில் இராமபிரான்
தணிக்கத் தேவை இல்லாமலே இலக்குவனின் சினம் நெறி பேணியது.
முன்னைச் சினம் இராமபிரானுக்கு ஏற்பட்டதாக இலக்குவன் கருதிய
குறையால் விளைந்தது என்பதையும், இங்கு எழுந்த சினம் பகவத்
கைங்கரியத்துக்குத் தடை எழுந்ததால் என்பதையும் சிந்தித்துப் பார்க்க
வேண்டும். உறங்காவில்லியின் சின வீக்கமும் நீக்கமும் ஆழ
நினைதற்கு உரியன. சூர்ப்பணகையும் அயோமுகியும் இலக்குவனால்
உறுப்பிழந்த இணைக் கதைப் பாத்திரங்களாவர். பெண் காமமும்,
ஆணின் வரன் முறை மீறிய கழி காமமும் பெருந்துன்பமும் அழிவும்
தரும் என்பதை இராமாயணம் கொண்டு உணர்க. வன் தொழில் -
பண்புத் தொகை, வீர - அண்மை விளி, மீண்டனென் - தன்மை
ஒருமை வினைமுற்று. புகன்ற - செய்த என்னும் வாய்பாட்டு இறந்த
காலப் பெயரெச்சம். ஆல் - அசை. போலும் - ஒப்பில் போலி.       90

3631.'துளைபடு மூக்கொடு செவி
     துமித்து உக,
வளை எயிறு இதழொடு
     அரிந்து, மாற்றிய
அளவையில், பூசலிட்டு
     அரற்றினாள்' என,
இளையவன் விளம்பிநின்று
     இரு கை கூப்பினான்.

    'துளைபடு மூக்கொடு - (அந்த அரக்கியினது) துவாரம்
பொருந்திய மூக்குடன்; செவி - காதுகளையும்; வளை எயிறு -
வளைந்த பற்களையும்; இதழோடு - இதழ்களையும்; துமித்து உக -
துண்டுபட்டு விழும்படி; அரிந்து - அறுத்து; மாற்றிய அளவையில் -
நீக்கிய போது; பூசலிட்டு அரற்றினாள்' என - (அவள்) பேரொலி
செய்து கதறினாள் என்று; விளம்பி நின்று - கூறி நின்று;
இளையவன் - இளையவனாகிய இலக்குவன்; இருகை கூப்பினான் -
(தன்) இரண்டு கைகளையும் கூப்பி நின்று (இராமனை) வணங்கினான்.

     அரக்கியின் மூக்கு முதலியவற்றை அரிந்ததனால் அவள்
அவலப் பேரொலி இட்டாள் என இலக்குவன் கூறி இராமனை
வணங்கினான். அவலப் பேரொலி கேட்டு இரக்கம் கொண்ட
இலக்குவன் உயிர் செகுக்காது விடுத்தனன் போலும். இப்பாடலில்
இலக்குவன் அயோமுகியின் மூக்கு, செவி, எயிறு, இதழ் ஆகியவற்றை
அறுத்து நீக்கிய செய்தி கூறப்படுவதால், இப்படலத்தில் உள்ள 86ஆம்
பாடலில் வரும்.

     என்னை இங்கு எய்தியது? இயம்புவாய் என
    அன்னவன் அஃது எலாம் அறியக் கூறலும். (3626)

    என்ற வரிகளுக்கு மூக்கு முதலியவற்றை நீக்கியதை ஒழித்துப்
பிற செய்திகளைப் பொருளாகக் கொள்க. அங்குத் தொகுத்துப்
பொதுவாகக் கூறியவர் இங்கு விரித்து விளக்குகிறார் என்க. துமித்து -
துண்டுபட்டு. அளவை - பொழுது, பூசல் - பேரொலி.                 91