3632. | 'தொல் இருள், தனைக் கொலத் தொடர்கின்றாளையும், கொல்லலை; நாசியைக் கொய்து நீக்கினாய்; வல்லை நீ; மனு முதல் மரபினோய்!' என, புல்லினன் - உவகையின் பொருமி விம்முவான். |
உவகையின் பொருமி விம்முவான் - மகிழ்ச்சியால் உடல் பூரித்து விம்மலுற்றவனாகிய (இராமன்); தொல் இருள் - முதிர்ந்த இருட்டில்; தனை - உன்னை; கொலத் தொடர்கின்றாளையும் - கொல்லத் தொடர்ந்து வந்த அரக்கியையும்; நீ - நீ; கொல்லலை - கொல்லாமல்; நாசியைக் கொய்து நீக்கினாய் - மூக்கையும் (பிற உறுப்புகளையும்) அறுத்து நீக்கி விட்டாய்; மனு முதல் மரபினோய் - மனுவை முதலாகக் கொண்ட மரபு வழி வந்தவனே!; வல்லை நீ - (இச் செயல் மரபுக் கேற்ற) வன்மை உடையவன் நீ; என - என்று இராமன் கூறி; புல்லினன் - இலக்குவனைத் தழுவினான். பெண் கொலை செய்யாது அவளைத் தம்பி தண்டித்ததை அறிந்த இராமன், "மனு முதல் மரபினோய் வல்லை" என்று கூறிப் புல்லினன் என்க. தொல் இருள் - முதிர்ந்த இருள். தனை - உன்னை. மனு முதல் மரபு - மனு, கதிரவனின் மகன். இவனை முதலாகக் கொண்டே சூரிய குலத்தரசர்கள் மனு முதல் நெறியினோர் எனப்பட்டனர். இவனே குல முதல்வன் என்க. இவன் வைவ சுவதமனு எனப்படுவான். கொல் - இடைக்குறை. தொடர்கின்றாளை - வினையாலணையும் பெயர்; காலவழுவமைதியும் ஆகும்; இங்கு இறந்த காலம் நிகழ்காலமாகச் சுட்டப்பட்டுள்ளமை அறிக. 92 இராமன் வருண மந்திரத்தால் வான நீர் பருகி, ஒரு மலையில் தங்குதல் 3633. | பேர அருந் துயர் அறப் பேர்ந்துளோர் என, வீரனும் தம்பியும் விடிவு நோக்குவார், வாருணம் நினைந்தனர்; வான நீர் உண்டு, தாரணி தாங்கிய கிரியில் தங்கினார். |
வீரனும் - வீரனாகிய இராமனும்; தம்பியும் - தம்பியாகிய இலக்குவனும்; பேர அருந்துயர் - நீக்க முடியாத பெருந்துன்பத்தை; அறப் பேர்ந்துளோர் என - முழுதும் நீக்கியவர் என்னுமாறு (அரக்கியால் ஏற்பட்ட |