துன்பத்தை நீக்கி); வாருணம் நினைந்தனர் - வருண மந்திரத்தை எண்ணினர்; வான நீர் உண்டு - (அதனால்) வானத்தில் இருந்து கிடைத்த நீரைப் பருகி; விடிவு நோக்குவார் - பொழுது விடியும் காலத்தை எதிர் நோக்கியவர்களாய்; தாரணி தாங்கிய - நிலத்தைத் தாங்கிக் கொண்டுள்ள; கிரியில் தங்கினார் - ஒரு பெரிய மலையில் தங்கி இருந்தார்கள். இராமனும் தம்பியும் நீக்க முடியாத துன்பத்திலிருந்து விடுபட்டவர்களாகி, வருண மந்திரம் சொல்லி அதனால் கிடைத்த வான நீரைப் பருகிப் பொழுது விடியும் காலத்தை எதிர்நோக்கி ஒரு பெரிய மலையில் தங்கி இருந்தனர். பேரஅரும் - நீக்குதற்கு அரிய. அற - முழுமையாக. வாருணம் - வருண மந்திரம். அருந்துயர் - பண்புத்தொகை, பேர்ந்துளோர் - வினையாலணையும் பெயர். நோக்குவார் - முற்றெச்சம். வானநீர் - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. 93 3634. | கல் அகல் வெள்ளிடை, கானின் நுண் மணல், பல்லவம், மலர், கொடு படுத்த பாயலின், எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன், மெல் அடி, இளையவன் வருட, வீரனே. |
வீரன் - வீரனாகிய இராமன்; கல் அகல் வெள்ளிடை - கற்கள் பரந்துள்ள வெளியிடத்தில்; கானின் நுண்மணல் - காட்டில் உள்ள நொய்மையான மணல்; பல்லவம் - தளிர்கள்; மலர்கொடு - (மற்றும்) மலர்கள் (ஆகியவை கொண்டு இலக்குவன்); படுத்த பாயலின் - அமைத்த படுக்கையில்; எல்லை இல் துயரினோடு இருந்து - அளவற்ற பெருந்துன்பத்தோடு இருந்து; மெல் அடி - (தனது) மென்மையான பாதங்களை; இளையவன் வருட - இளையவன் ஆகிய இலக்குவன் மெதுவாகத் தடவ; சாய்ந்தனன் - பள்ளி கொண்டான். ஏ - ஈற்றசை. இராமன் வெட்ட வெளியில் மணல், தளிர்கள், மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு இலக்குவன் அமைத்த படுக்கையில், அவன் மெத்தெனத் திருவடி வருடப் பள்ளி கொண்டான். வெள்ளிடை - மேல் மறைவில்லாத இடம், வெட்ட வெளி என்ப. பல்லவம் - தளிர். படுத்த - அமைத்த. பரமனுக்குப் பாகவதன் செய்யும் கைங்கர்யத்தை ஈற்றடியால் கூறினார். இதில் உடன்பிறப்புப் பாசம் நிறைந்து உள்ளமையையும் எண்ணுக. கொடு - இடைக்குறை. மெல் அடி - பண்புத்தொகை. |