பக்கம் எண் :

724ஆரணிய காண்டம்

     காடு முழுதும் சீதையின் உருவமாகவே இராமனுக்குத்
தோன்றியது. ஒரு பொருளை ஆழ நினைத்தால் அப்பொருளே
எங்கும் உருவெளியாகத் தோன்றும் என்பதாம். "நோக்கிய எல்லாம்
அவையே போறல்" என்பது தொல்காப்பியர் (1043) சுட்டும்
மெய்ப்பாடு. மானவள் - பெருமை உடையவள், இறை - சிறிது, சானகி
- சனகனது மகள். உழுகின்ற கொழுமுனையில் உதிக்கின்ற கதிரொளி
போல் தோன்றிய தொழுந்தகைய நன்னலத்துப் பெண்ணரசி என்க.
மானவள் - மான் + அவள் எனப் பிரித்து மான் போன்ற அவள்
என்றும் பொருள் கொள்ளலாம் என்பர். வை. மு. கோ. தன்மையே -
ஏகாரம் ஈற்றசை.                                             96

3637.கருங்குழல், சேயரிக்
     கண்ணி, கற்பினோர்க்கு
அருங் கலம், மருங்கு வந்து
     இருப்ப, ஆசையால்
ஒருங்குறத் தழுவுவென்;
     ஒன்றும் காண்கிலேன்;
மருங்குல்போல் ஆனதோ
     வடிவும், மெல்லவே?

    கருங்குழல் - கருமையான கூந்தலினையும்; சேயரிக் கண்ணி -
செவ்வரி படர்ந்த கண்களையும் உடைய; கற்பினோர்க்கு அருங்கலம்-
கற்பினை உடைய மகளிருக்கு அருமையான அணிகலன் போன்ற
(சீதை) ; மருங்கு வந்து இருப்ப - (என்) பக்கத்தில் வந்து இருக்க;
ஆசையால் ஒருங்குறத் தழுவுவென் - (அவள் மீது கொண்ட)
காதலால் உடல் சேரத் தழுவுவேன்; ஒன்றும் காண்கிலேன் -
(ஆனால் அவ்வாறு தழுவியும்) ஒன்றையும் காணவில்லை; வடிவும் -
அச்சீதை உடைய உருவமும்; மருங்குல் போல் மெல்லவே
ஆனதோ -
(அவளது பொய்யோ எனும்) இடையினைப் போல்;
மெதுவாக - இல்லையாய்விட்டதா?

     சீதையின் உருவெளித் தோற்றத்தை உண்மையென நம்பித்
தழுவிய இராமன், அவளது இடை போல் உருவமும் இல்லாமல் போய்
விட்டதோ என்கிறான். குழல் - கூந்தல். அரி - வரி. மருங்கு -
பக்கம். மருங்குல் - இடை. மூவழிப் பெருகி மூவழிச் சிறுகிய
உறுப்புகள் கொண்டவள் என்பதைக் கூறியவாறு. கருங்குழல் -
பண்புத் தொகை. கற்பினோர் - வினையாலணையும் பெயர்.
அருங்கலம் - பண்புத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.  97

3638.'புண்டரிகப் புது
     மலரில் தேன் பொதி
தொண்டைஅம் சேயொளித்
     துவர்த்த வாய் அமுது
உண்டனென்; ஈண்டு அவள்
     உழையள் அல்லளால்;