தொடர்பு நோக்கி 'எய்தியதனால்' எனப் பொருள் கொள்ளப்பட்டது. ஐம்பூதங்களினும் பெரிதாகிய (பிரிவுத்) துன்பம் வந்தால், கொடிய கங்குல் சீதை கண்ணினும் நெடியதாக இராமனுக்குத் தோன்றுகிறது. 99 3640. | 'அப்புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என - உப்புடை இந்து என்று உதித்த ஊழித் தீ, வெப்புடை விரி கதிர் வெதுப்ப - மெய் எலாம் கொப்புளம் பொடித்ததோ, கொதிக்கும் வானமே?' |
'உப்புடை இந்து என்று - அழகு உடைய நிலவு என்று; உதித்த ஊழித் தீ - (வானத்தில் உதித்த) ஊழித் தீயினுடைய; வெப்புடை விரிகதிர் வெதுப்ப - வெபபம் உடைய விரிந்த கதிர்கள் சுட; மெய் எலாம் - (தன்) உடம்பில் எல்லாம்; அப்புடை அலங்கு மீன் - நீரோட்டம் உடைய விளங்குகிற மீன்கள்; அலர்ந்ததாம் என - விளங்கினதாம் என்பது; கொதிக்கும் வானம் - (இந்து எனும் ஊழித் தீயினால்) கொதிக்கின்ற வானம்; கொப்புளம் பொடித்ததோ - கொப்புளங் கொண்டதோ? எனுமாறு விளங்கியது'. இந்து என்கிற ஊழித் தீயினால் வெப்பமடைந்த வானம் கொப்புளம் கொண்டது போல் அதில் மீன்கள் விளங்கின என்றவாறு. அப்பு - நீர், உப்பு - இனிமை, அழகு. இந்து - நிலவு. அலங்குதல் - விளங்குதல். 100 3641. | இன்னன இன்னன பன்னி, ஈடு அழி மன்னவர் மன்னவன் மதி மயங்கினான்; அன்னது கண்டனன், அல்கினான் என, துன்னிய செங் கதிர்ச் செல்வன் தோன்றினான். |
இன்னன இன்னன பன்னி - இவ்வாறாகப் பல சொற்களைப் பல முறை கூறி; ஈடு அழி மன்னவர் மன்னவன் - வலிமை ஒடுங்கிய பேரரசனாகிய இராமன்; மதிமயங்கினான் - அறிவு கலங்கினான்; துன்னிய செங்கதிர்ச் செல்வன் - (அவனது பிரிவுத் துயர் கண்ட) சிவந்த கதிர்களை உடைய கதிரவன்; அன்னது கண்டனன் - (அவனது) அத் தன்மையைக் கண்டனனாகி; அல்கினான் என - (இவன்) மிக மெலிந்தான் என்று எண்ணி; தோன்றினான் - (அவலத் துயர் துடைக்கத் தோன்றியவன் போலத்) தோன்றினான். |