திசைகள் அளவு (பொங்கிப் பரவி) நீரற்ற வெட்டவெளி ஆயின; சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன - கருக் கொண்ட (நீர் உண்ட) மேகங்கள் சுருண்டு கீழே வீழ்ந்தன. கவந்தன் கையகப்பட்டவையெல்லாம் நிலை குலைந்தமையால், அவன் கைகளுக்கு உட்பட்டவை மட்டுமல்லாமல் எங்கணும் உள்ள யாவையும் நிலைகுலைந்தமையை மூன்று செய்யுட்களும் தொகுத்துரைக்கின்றன. பெரிய உடல் கொண்ட யானை முதல் சிற்றுடல் கொண்ட எறும்பு வரை என்று எல்லை குறித்தது எல்லா உயிர்ப் பொருள்களையும் கருதி; வலையிலகப்பட்ட உயிர்கள் அச்சத்தால் வெறித்த பார்வை கொண்டன என்றது யாரால் என்ன தீங்கு வரப் போகிறது என்று அறிய இயலாமையைச் சுட்டியது. ஆட்சித் திறன் அற்ற அரசனின் நிர்வாகத்தில் எவரும் எவ்வகையான நிலைபேறும் அற்றவர்களாய் ஒவ்வொரு கணமும் அழிவையே எதிர்நோக்கிக் கலங்கி நசிவர். இது உவமையாய்ப் பல்லுயிர்களும் அலமந்த அவலத்தை விளக்கிற்று. கானகத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் காட்டாறுகள் நிலை கலங்கிப் பொங்கித் திசை எல்லைகளை அடைந்தன; காட்டாறுகள் ஓடிய இடங்கள் வெற்றிடங்களாயின. நிலத்து நிகழ்ச்சி இது; வானில் நிகழ்ந்த நிலைகுலைவால் மேகங்கள் சுருண்டு நிலத்திலே வீழ்ந்தன. உயிரினங்களில் இயங்குவன மண்ணுலகு. விண்ணுலகு யாவும் கவந்தன் கரங்களின் இயக்கத்தால் நிலை குலைந்தன என்கிறார் கவிச்சக்ரவர்த்தி. 2, 3, 4 கவந்தன் கரவலையில் இருவரும் | 3647. | நால் திசைப் பரவையும், இறுதி நாள் உற, காற்று இசைத்து எழ எழுந்து, உலகம் எங்கணும் ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன போல், திசை சுற்றிய கரத்துப் புக்குளார். |
இறுதி நாள் உற - உலகங்கள் அழியும் ஊழிக்காலம் வந்து சேர்தலால்; நால் திசைப் பரவையும் - நான்கு திசைகளிலும் உள்ள எல்லாக் கடல்களும்; உலகம் எங்கணும் - உலகம் முழுவதிலும்; காற்று இசைத்து எழ எழுந்து - ஊழிக் காற்று முழங்கிப் பரவி; ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றனபோல் - எதிர்த்து ஆரவாரத்தோடு உயரமாகி வந்து நெருக்குவனபோல; திசை சுற்றிய - எல்லாத் திசைகளிலும் சுழன்று வருகின்ற; கரத்துப் புக்குளார் - (கவந்தனின்) கைகளிடையே இராமலக்குவர் புகுந்தனர். ஊழிக் காற்றினால் பொங்கிய எல்லாக் கடல்களும் பரவிச்சுழல்வது போல வேகமாகக் கவந்தனின் கரங்கள் சுழன்று வளைத்தன;வளைத்த கரங்களிடையே இருவரும் சிக்கினர். இது பாடலின் கருத்து.நால்திசைப் பரவையும் - இதன்கண் உள்ள உம்மை நான்குதிசைகளிலும் உள்ள கடல்கள் யாவற்றையும் உளப்படுத்தலின்முற்றும்மையாகும். 5 |