2637. | தெரிஞ்சுற நோக்கினர்- செய்த செய் தவம் அருஞ் சிறப்பு உதவ, நல் அறிவு கைதர, விரிஞ்சுறப் பற்றிய பிறவி வெந் துயர்ப் பெருஞ் சிறை வீடு பெற்றனைய பெற்றியார். |
தெரிஞ்சுற நோக்கினர் - நன்றாகத் தெரியும்படி இராமனைக் கண்ட அம் முனிவர்கள்; செய்த செய்தவம் அருஞ்சிறப்பு உதவ- தாம் வருந்திச் செய்த சிறந்த தவமானது பெறற்கரிய சிறப்பைக் கொடுக்குமாறு; நல்அறிவு கைதர - தாம் பெற்ற நல்ல ஞானம் உதவி செய்ய, விரிஞ்சுறப் பற்றிய பிறவிவெந்துயர்ப் பெருஞ்சிறை வீடு - விரிந்து தம்மை வலிதாய்ப் பற்றியிருந்த கொடியபிறவியாம் துன்பத்தைத் தரும் பெரிய சிறையிலிருந்து விடுதலை, பெற்றனைய பெற்றியார் -அடைந்ததைப் போன்ற தன்மையுள்ளவர்களானார்கள். முனிவர் செய்த தவம் நல்ல ஞானமாம் மெய்யறிவைத் தரும். அதனால் தம் பிறவியாகியசிறையிலிருந்து விடுதலை பெற்றவர்கள் போலாயினர். தெரிஞ்சுற நோக்குதல் இராமனைத்திருமாலின் திருவவதாரம் எனக் காணுதல். தெரிஞ்சு, விரிஞ்சு என்பன முறையே தெரிந்து, விரிந்து எனும் சொற்களின் போலிகள்.கைதரல் - உற்றுழி உதவல். தயரதன் மந்திர சபையில் தன் கருத்தை வெளியிடும்போது 'தருமம்கைதர, மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்' (1327) எனக் கூறும்போது 'கைதர' என்ற சொல்லாட்சியை உணரலாம். வீடு - விடுதலை, முதனிலை திரிந்த தொழிற் பெயர். 7 2638. | வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த்தவம் பூண்டுளர் ஆயினும், பொறையின் ஆற்றலால், மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார்; ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார் அரோ |
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த் தவம் பூண்டுளர் ஆயினும் - விரும்பிச் செய்தவர்க்கு அவர்கள் விரும்பியவற்றை விரும்பிய வண்ணமே தரும் நற்றவம்மேற்கொண்டுள்ளவர் ஆனாலும்; பொறையின் |