பக்கம் எண் :

758ஆரணிய காண்டம்

பொகுட்டு - எப்பொழுதும் மலராத தாமரை அரும்பின் கொட்டையே;
புரை - உனது இருப்பிடமாகும்.

     திருமாலின் இருப்பிடத்தைக் கூறுவது இச் செய்யுள் அண்டமே
கோயில்; திசைகளே சுவர், மேல் ஏழும் கீழ் ஏழுமாக அமைந்துள்ள
உலகங்களே கோயிலின் அடுக்கு நிலைகள் அக்கோயிலுக்கு ஒளி
ஊட்டுவன சூரிய, சந்திர, நட்சத்திர மண்டலங்கள்; அந்த ஒளி
மண்டலங்களின் ஒளி பெற்றுத் தான் மலர வேண்டுமென்றில்லாததொரு
தாமரை அரும்பு; அந்த அரும்பினுள் உள்ள காணிகை என்னும்
(தாமரைக்) காயே பரமபதமாகிய இருப்பிடம். பூவுலகத்துத் தாமரை
மலர்வதற்குக் கதிரவன் ஒளி தேவை; ஆயின், பரமபதத் தாமரைக்குக்
கதிரவன் முதலாய ஒளி மண்டலங்களின் உதவி தேவைப்படாது ஏழ்
ஏழ் (ஏழேழ்) உம்மைத் தொகை (ஏழும் ஏழும்).                    44

3687.'மண்பால்-அமரர் வரம்பு
     ஆரும் காணாத,
எண்பால் உயர்ந்த, எரி
     ஓங்கும் நல் வேள்வி
உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ;
     இரண்டும் ஒக்கின்ற
பண்பு ஆர் அறிவார்?
     பகராய், பரமேட்டி!

    பரமேட்டி - எல்லாவற்றினும் மேலான நிலையில் உள்ளவனே;
மண்பால் அமரர் - பூசுரர் எனப்படும் வேதியர்கள்; வரம்பு ஆரும்
காணாத எண்பால் உயர்ந்த -
முடிவெல்லையாக அமைந்து
எவராலும் காண இயலாத எட்டுத் திசைகளிலும் மேம்பட்ட; எரி
ஓங்கும் நல் வேள்வி -
ஓமத் தீயில் பெருமையால் உயர்ந்த
வேள்வியுணவை (அவியுணவை); உண்பாய் நீ - உண்பவன் நீயே;
ஊட்டுவாய் நீ - (அவியுணவை உனக்கு ஊட்டுவோர்க்கும்)
ஊட்டுகின்றவனும் நீயே!; இரண்டும் ஒக்கின்ற பண்பு - உண்பவனும்
ஊட்டுவோனுமாக இரண்டு நிலைகளும் உன்னிடம் ஒன்றியுள்ள
பண்பினை; ஆர் அறிவார் - எவர்தாம் அறிவர்?; பகராய் - சொல்.

     வேதியர்களைப் பூசுரர் (மண்ணுலகத் தேவர்) என்பது ஒரு மரபு.
பரமேஷ்டி என்ற வடசொல் பரமேட்டி என நின்றது. எண் பால் -
கருத்தளவால் (அளவிட முடியாத) பாங்கு எனலுமாம். உண்பானும்
ஊட்டுபவனுமாய் இருக்கின்ற அரு மாயை நிலை நம்மனோரால்
அறியும் நிலையதன்று என்பது கருத்து 'நீ அறிதி எப்பொருளும்;
அவை உன்னை நிலை அறியா; மாயை இது என்கொலோ? வாராதே
வரவல்லாய் (2570), துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி; ஒரு தன்மை
சொல்ல அறியாய் - பிறந்தாயும் ஒத்தி; பிறவாயும் ஒத்தி.... ஆர் இவ்
அதிரேக மாயை அறிவார்' (8259), 'எறிந்தாரும் ஏறுபடுவாரும்.......
எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே பிறிந்தார் பிறிந்த
பொருளோடு போதி; பிறியாது நிற்றி.... ஆர் இவ் அதிரேக மாயை
அறிவார் (8261) என்ற கவிஞர் வாக்குகளையும் ஒப்பிட்டு உணர்க.      45