3694. | 'கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும் இணை இலாள் தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்; புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது; அன்னதேபோல், துணை இலாதவருக்கு இன்னா, பகைப் புலம் தொலைத்து நீக்கல். |
'கணை உலாம் சிலையினீரைக் - அம்புகள் நிரம்பப் பொருந்தும் வில் ஏந்திய உங்களை; காக்குநர் இன்மையேனும் - காக்க வேண்டியவர்களோ காக்கும் தகுதியுடையவர்களோ எவரும் இல்லையென்றாலும்; இணை இலாள்தன்னை நாடற்கு - ஒப்பற்றவளாகிய சீதாபிராட்டியாரைத் தேடுவதற்கு; ஏயன செய்தற்கு ஏற்கும் - பொருத்தமான செயல்களைச் செய்வதற்குப் பிறர் துணையை நாடிப்பெறுதல் பொருந்தும்; புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது - தெப்பம் இல்லாதவர்களுக்கு கடலைக் கடப்பது அரிது; அன்னதே போல் - அதைப் போல; பகைப் புலம் தொலைத்து நீக்கல் - பகைவர்களை அழித்தொழிப்பது; துணை இலாதவருக்கு இன்னா' - துணை வலிமை அற்றவர்களுக்குத் துன்பமேயாகும். 'தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான்' (3968), கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவன் (4023) என இக் காண்டத்திலும், 'அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் அரும் துணை இன்றி..., திரிய நீயேயோ கடவாய்' (2565) என ஆரணிய காண்டத்திலும் இராமன் துணை தேவைப்படா வீரன் என்பது கூறப்பட்டது. எனினும், சீதையைத் தேடுதற்குத் துணை வலி தேவை என்கிறான் கவந்தன். 52 3695. | 'பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என்? பதும பீடத்து உழைப் பெருந் தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும், அறிதிர் அன்றே, ஒழிப்ப அருந் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை? |
'பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என் - பழித்துக் கூற முடியாத நிலையில் உள்ள உங்களது ஆண்மை பற்றி விரித்துரைத்தல் வேண்டுமா என்ன (வேண்டியதில்லை); பதுமபீடத்துழை - தாமரையாகிய பீடத்தில் (எழுந்தருளியுள்ள); பெருந் தகைமை சான்ற அந்தணன் - பெருமை மிக்க வேதியனாகிய நான்முகன்; உயிர்த்த எல்லாம் - படைத்தவற்றை |