பக்கம் எண் :

கவந்தன் படலம் 767

13. சவரி பிறப்பு நீங்கு படலம்

     வேடுவர் குலத்துத் தவ மாதரசியாகிய சவரி இராம தரிசனத்தால்
தன் பிறப்பு நீங்கி வீடுபேறு அடைந்த செய்தியைக் கூறும் படலம்இது.

     சபரி என்ற வடசொல் சவரி எனத் தமிழ் வடிவு கொண்டது.
சவரர் வேடுவக் குலத்தவர். வேட்டுவர்க்கு இராமாவதாரத்தில் தனிச்
சிறப்பு இருக்கிறது என்று கூறலாம். அயோத்தியா காண்டத்து
இறுதியில் வரும் குகன், பத்திமையில் ஈடு இணை இல்லாதவன்;
மேலும், 'என் உயிர் அனையாய் நீ' (1994) என இராம பிரானாலேயே
போற்றப்பட்டவன். இப்படலத்தில் 'எங்கள் வரத்துறு துயரம் தீர்த்தாய்;
அம்மனை வாழி' (3703) என்ற தொடரால் இராமன் சவரியைத்
தாயாகப் போற்றிய திறம் தெரிகிறது. பெரிய புராணத்தில் வரும்
வேடர் குலத்துக் கண்ணப்பர் திறத்தைக் குகனொடும் சவரியொடும்
ஒப்பிட்டு நோக்குவது சிறப்புடைய பயன் நல்கும்.

மதங்க முனிவரின் தவச் சாலை

அறுசீர் ஆசிரிய விருத்தம்

3699. கண்ணிய தருதற்கு ஒத்த கற்பகத்
     தருவும் என்ன,
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறுஞ்
     சோலை - ஞாலம்
எண்ணிய இன்பம் அன்றி,
     துன்பங்கள் இல்லை ஆன,
புண்ணியம் புரிந்தோர் வைகும் - துறக்கமே
     போன்றது அன்றே!

    கண்ணிய தருதற்கு ஒத்த கற்பகத் தருவும் என்ன - (இவை
வேண்டும் என) நினைக்கப்பட்டவற்றையெல்லாம் தரவல்ல கற்பக
மரத்தைப் போல; உண்ணிய நல்கும் - உண்பதற்கு (ஏற்ற காய் கனி
கிழங்கு தேன் போன்றவற்றை) வழங்குகின்ற; செல்வம் உறு நறுஞ்
சோலை -
வளம் மிக்கதும் நறுமணம் உள்ளதுமான (மதங்காசிரமம்
அமைந்த) சோலையானது; ஞாலம் எண்ணிய - உலகத்தார் அடைய
எண்ணிய; இன்பம் அன்றித் துன்பங்கள் இல்லை ஆன -
இன்பத்தைத் தவிரத் துன்பமே இல்லாத;