'மூலம் இல்லான் நண்ணி, தலைப்பட்டு, இன்னுரை அருளி என்றான்' எனக் கூட்டிப் பொருள் கொள்க. ஆதிமூலம் (காரணம்) ஆகிய பெருமானுக்கு முன்னதாகக் கூடிய வேறு ஒரு மூலம் இல்லையாதலின் 'முன் இவற்கு இது என்று எண்ணலாவதோர் மூலம் இல்லான்' என்றார். முதல் முன்னவன் (2561) 'தனிமூலத்து அரும்பரமே (2564) நீ ஆதி முதல் தாதை (2568) தன்னலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான் (3626) என்று இக் காண்டத்துள் வந்துள்ள பிற தொடர்கள் நினைவு கூரத்தக்கன. ஆண்டு (அங்கேயே) நின்று (நிலைத்திருந்து) என்ற தொடர் மேல் வரும் 3702 ஆம் பாடற் செய்தியை உட்கொண்டது. காலம் என்ற தத்துவம் தன்னளவில் எல்லையற்றது; 'இராமபிரான் எப்பொழுது வருவான், எப்பொழுது வருவான்' என்று இராமபிரானையன்றி வேறு நினைவு சவரிக்கு இல்லை என்பதைத் 'தன்னையே' என்பதிலுள்ள ஏகாரம் புலப்படுத்திற்று. விருந்தினராக வருவோருக்கு விருந்தோம்புவார் இன்சொல் வழங்குதல் மரபு; இங்கே இராமன், விருந்தோம்பும் சவரிக்கு இன்னுரை அருளியதாகக் கம்பர் குறிப்பிடுகிறார். 'வாராதே வரவல்லான்' (2570); ஆதலின், அவன் விருந்தினன் அல்லன்; அருள்பாலிக்க வந்தவன் பரம்பொருள் ஒன்றே நாட்டமாய், மீளா ஆளாய், கொய்ம்மலர்ச் சேவடி இணையே கூடியிருப்போர்க்கு எந்நாளும் இன்பமே, துன்பம் இல்லை என்ற கருத்து முன் பாடலில் வந்தது; அதனை 'தீது இன்று இருந்தனை போலும்' என்ற வினா இப்பாடலில் குறித்தது. ஒப்பில் போலியாகிய 'போலும் இங்கே வினாப் பொருளில் வந்தது. 'இன்றி' என்ற வினையெச்சம் 'இன்று என வந்தது; எச்சத்திரிபு. (விகாரமேயாயினும் இதனை இயல்பெனக் கொள்ளும் இலக்கணம்). 2 3701. | ஆண்டு, அவள் அன்பின் ஏத்தி, அழுது இழி அருவிக்கண்ணள், 'மாண்டது என் மாயப் பாசம்; வந்தது, வரம்பு இல் காலம் பூண்ட மா தவத்தின் செல்வம்; போயது பிறவி' என்பாள் வேண்டிய கொணர்ந்து நல்க, விருந்துசெய்து இருந்த வேலை, |
ஆண்டு - அவ்வேளையில்; அவள் அன்பின் ஏத்தி - சவரி இராமபிரானை அன்பினால் புகழ்ந்து; அழுது இழி அருவிக் கண்ணள் - (பக்திக் கனிவினால்) அழுது, வழிகின்ற அருவிபோன்ற கண்ணீர் உடையவளாய்; என் மாயப் பாசம் மாண்டது - பொய்யான என் உலகப் பற்று அழிந்தது; வரம்பு இல் காலம் பூண்ட மா தவத்தின் செல்வம் வந்தது - அளவற்ற காலம் மேற்கொண்டிருந்த பெருந் தவத்தின் பயன் என்னை வந்தடைந்தது; பிறவி போயது - இனிமேல் பிறப்பு ஒழிந்தது; என்பாள் - என்று சொல்லி; வேண்டிய கொணர்ந்து நல்க - ஏராளமாகக் கனி |