பக்கம் எண் :

சவரி பிறப்பு நீங்கு படலம் 773

     மீட்டிங்கு வாரா வீட்டு நெறியினைத் தெளிவுறக் காட்டும் ஞான
குருவின் சொற்களை நன்மாணாக்கன் ஆர்வமும் அக்கறையும்
கொண்டு கேட்பான்; அது போலச் சவரி கூறியவற்றை இராமபிரான்
கேட்டான் என்பதாம். முன் பாடலில் 'வினையறு நோன்பினாளும்
மெய்ம்மையின் நோக்கி...... சொன்னாள்' என அமைந்த தொடரினை
இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும். வேடுவர் குலத்துச் சவரி
சொன்னவற்றைக் கேட்டவன் யார்? வேத ஞானிகள் நுகரும்
அமுதத்தின் சுவையாய் உள்ள பரம் பொருள் அப்படிக் கேட்டான்
என்கிறார் கம்பர். ஆசிரிய நிலையில் பாகவதரையும் மாணவ
நிலையில் பகவானையும் அமைத்திருப்பது தலை தடுமாற்றம் அன்று
என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே என்ப, மன், ஓ
என மூன்று அசைகளால் கம்பர் பிணித்து நிறுத்துகிறார். மெய்ந்நெறி
சொல்லுவார் உலகியல் நிலையாதாயினும் குரு ஆகிறார்; கேட்டுத்
தெளிபவர் உயர்வற உயர்நலம் உடையோராயினும் மாணாக்கர்
ஆகிறார். குரு - சிஷ்ய பாவத்தில் இஃது ஒரு தனி நிலை.

     கேள்வி என்பதற்குக் கேட்டறிதற்குரிய நூல்கள் என்று பொருள்
உரைப்பதுண்டு. பரமனையே ஞானச் சுவையாக நுகரச் செய்யத்தக்கது
என்ற கருத்துப் பற்றிக் 'கேள்வி'க்கு வேதம் என இங்கே பொருள்
உரைக்கப்பட்டது. புறநானூறு (புறநா. 361) முதலான பழைய
நூல்களிலும் இப்பொருள் ஆளப்பட்டது உணர்க. 'சுருதி'
(கேட்கப்படுவது) என வேதம் சுட்டப்படும்.

     நின்றான் என்ற இறந்த கால வினைமுற்றின் இடைநிலை காலம்
குறித்ததன்று;                                               7

சவரி முடிவும் மேற்பயணமும்

3706.பின், அவள் உழந்து பெற்ற
     யோகத்தின் பெற்றியாலே
தன் உடல் துறந்து, தான் அத்
     தனிமையின் இனிது சார்ந்தாள்;
அன்னது கண்ட வீரர் அதிசயம்
     அளவின்று எய்தி,
பொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப,
     புகன்ற மா நெறியில் போனார்.

    பின் - சவரி வழி சொல்ல இருவரும் கேட்ட பிறகு; அவள் -
அச்சவரி; உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே - அரிய
முயற்சியால் வருந்திப் பெற்ற யோக நெறியின் சிறப்பாலே; தன் உடல்
துறந்து -
தன் உடம்பை விடுத்து; தான் அத் தனிமையின் இனிது
சார்ந்தாள் -
அவள் அந்தத் தனிப்பெரு நிலையினை இனிதே சென்று
சேர்ந்தாள்; அன்னது கண்ட வீரர் - அதனை நேரிலே கண்ட
வீரர்களாகிய இராமனும் இலக்குவனும்; அதிசயம் அளவின்று எய்தி-
அளவின்றி அதிசயம் அடைந்து; பொன் அடிக்கழல்கள் ஆர்ப்ப-
அழகிய கால்களில் கட்டிய கழல்கள் ஒலிக்கும்படியாக; புகன்ற மா
நெறியில் போனார் -
சவரி சொல்லிய பெருமைக்குரிய வழியிலே
போனார்கள்.