பக்கம் எண் :

774ஆரணிய காண்டம்

     யோக நெறி உணர்தலும் அதனைப் பின்பற்றலும் அருமை;
அதனைப் பெரிதும் பாடுபட்டு அறிந்தவள் சவரி. அந்நெறியில் முற்றுற
வெற்றி பெற்ற அவள் யோகக் கனலை எழுப்பி அவ்வழி வீடு
எய்தினாள். அதனைக் கண்டு வியந்தனர். இராமலக்குவர். பின்னர்
அச் சவரி சொன்ன வழியைப் பற்றி இரலை மலை நோக்கிப் பயணம்
சென்றனர் - இது பாடற் செய்தி.

     காயத்தைப் பொசுக்காமல் உதறிச் சென்றது யோகத்தவம். பல்
துறைத் தவமுனிவர்களைக் கண்டறிந்த இராமலக்குவர்க்குச் சவரியின்
யோக முத்தி புதிய காட்சி. புதுமை பற்றிய வியப்பினைக் கம்பர்
'அதிசயம்' என்றார். வாழ்விலே வியப்புக்கு உரிய வெற்றிக்
காட்சியைக் காணும் பேறு பெற்றனர் என்பதை வீரக் கழல்
ஒலிப்பதாகச் சொல்லி விளக்குகிறார். கவிச்சக்கரவர்த்தி. பிராட்டியைக்
காணுதற்கு உதவியாகச் சுக்கிரீவனின் துணை கிடைக்கப் போவதால்
மனத்துள் எழுந்த வெற்றியுணர்வுக்குக் கழல்களின் துணை கிடைக்கப்
போவதால் மனத்துள் எழுந்த வெற்றியுணர்வுக்குக் கழல்களின் ஆர்ப்பு
ஒரு குறியீடு என்றும் கொள்ளலாம். பிராட்டி மீட்புக்கான வழி
புலப்படுதல் குறித்து அதனை 'மாநெறி' எனச் சிறப்பித்தார்.

     இன்றி (அளவின்றி) என்ற வினையெச்சம் இன்று என நின்றது;
'அன்றி இன்றி என் வினை எஞ்சு இகரம் தொடர்பினுள் உகரமாய்
வரின் இயல்பே' என்ற விதி நினைவிற் கொள்ளத்தக்கது.             8

3707. தண் நறுங் கானும், குன்றும்,
     நதிகளும், தவிரப் போனார்;
மண்ணிடை, வைகல்தோறும், வரம்பு
     இலா மாக்கள் ஆட,
கண்ணிய வினைகள் என்னும்
     கட்டு அழல் கதுவலாலே,
புண்ணியம் உருகிற்றன்ன பம்பை
     ஆம் பொய்கை புக்கார்.

    தண் நறுங் கானும் குன்றும் நதிகளும் - குளிர்ச்சியும் நல்ல
மணமும் கொண்ட காடு குன்று ஆறு ஆகியவை; தவிரப் போனார் -
நீங்கிப் பின்போகுமாறு கடந்து | இராமலக்குவர் சென்றனர்;
மண்ணிடை - இவ்வுலகிலே; வைகல்தோறும் - நாள்தோறும்; வரம்பு
இலா மாக்கள் ஆட -கண்ணிய வினைகள் என்னும் -
(அம்மக்களால்) கருதிச் செய்யப்பட்ட வினைகளாகிய; கட்டு அழல்
கதுவலாலே -
உறுதியான நெருப்புப் பற்றி (உருக்குதலாலே);
புண்ணியம் உருகிற்றன்ன - நல் வினையே உருகித் தோன்றுவது
போன்ற; பம்பை ஆம் பொய்கை புக்கார் - பம்பை என்னும்
பொய்கையை அடைந்தார்கள்.

     காடு, மலை, ஆறுகள் பலவும் கடந்து பம்பையை இராமலக்குவர்
அடைந்தனர் என்பது திரண்ட கருத்து, பம்பை பற்றிய சிறப்பு மிக
அருமையான முறையில் இதன்கண் வருணிக்கப்பட்டுள்ளது. எண்ணத்
தொலையாத மக்கள் நாள்தோறும் பம்பையில் நீராடுகின்றனர்;
அவர்கள் செய்த வினைகள் என்ற நெருப்பு அப் பம்பையை
உருக்குகிறது; அப்படி உருக்குதலால் புண்ணியப் பயனே உருகிவிட்டது
போலத் தூயதாய்த்