காவலன் மதலை! - உலகங்களைக் காத்தலில் வல்லவனாம் தயரதனின் மகனே!; வந்தது ஓர் வெய்ய வெங்கொடுந்தொழில் விளைவு கேள் எனா - எங்களுக்கு நேரிட்டதாகிய ஒரு மிகவும் அதிககொடுமையான செய்கைகளின் பெருக்கத்தை நீ கேட்டருள் என்று. ஏத்து உவந்து என்பதற்கு அம் முனிவர்கள் செய்த துதிகளுக்கு மனம் மகிழ்ந்து என்றும்கொள்வர். வையகம் காவலன் மதலை என்றதால் தந்தையின் கடமை மகனுக்கும் உண்டு என்பது குறிப்பு.வெய்ய வெங் கொடு - ஒரு பொருட் பன்மொழிகள். மனத்தாலும் மொழியாலும் உடலாலும் கொடுமைக்குட்பட்டனர் என்பதைக் குறிக்க மும்முறை கூறினார் எனலுமாம். 11 2642. | 'இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் அரக்கர் என்று உளர் சிலர், அறத்தின் நீங்கினார் நெருக்கவும், யாம் படர் நெறி அலா நெறி துரக்கவும், அருந் தவத் துறையுள் நீங்கினேம். |
இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் - இரங்குதல் என்று கூறும் ஒரு செய்கை ஒரு சிறிதும் இல்லாத மனம் உடையவர்களும்; அறத்தின்நீங்கினார் - தருமத்திலிருந்து நீங்கியவர்களுமான; அரக்கர் என்ற சிலர் உளர் - இராக்கதர் என்று சொல்லப்பட்டுச் சிலர் இருக்கின்றனர்; நெருக்கவும் யாம்படர் நெறி அலாநெறி துரக்கவும் - (அவர்கள் எங்களை) வருத்துவதால் நாங்கள் ஒழுகுதற்குரிய நல்லொழுக்கம் அல்லாத தீயொழுக்கத்தில் செலுத்துவதனாலும்; அருந்தவத் துறையுள் நீங்கினேம் - அரியதவத்தின் வழியிலிருந்து விலகினோம். ஒரு பொருள் - ஒப்பற்ற செல்வமுமாம். இரக்கம் என்ற பண்பைப் பொருளாகக் கூறுவது வைசேடிகமதம் பற்றி என்பர். சினத்தைப் பொருள் என்று கூறும் குறள். அரக்கர் அறத்தின் நீங்கினர்.முனிவர்களாகிய நாங்கள் தவத்துறையுள் நீங்கினோம் என்ற இரு கூற்றுக்களும் ஒப்பிட்டு மகிழற்குரியவை. உறையுள் எனக் கொண்டு தவஞ் செய்யுமிடம் எனவும் உரைப்பர். துறையுள் - உருபுமயக்கம். 12 2643. | 'வல்லியம் பல திரி வனத்து மான் என, எல்லியும் பகலும், நொந்து இரங்கி ஆற்றலெம்; சொல்லிய அற நெறித் துறையும் நீங்கினெம்; |
|