பக்கம் எண் :

விராதன் வதைப் படலம் 9

2528.பம்பு செக்கர், எரி, ஒக்கும்
     மயிர் பக்கம் எரிய,
கும்பம் உற்ற உயர் நெற்றியின்
     விசித்து, ஒளிகுலாம்
உம்பருக்கு அரசன் மால் கரியின்
     ஓடை, எயிறு ஒண்
கிம்புரிப் பெரிய தோள்
     வளையொடும், கிளரவே

    பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர் - பரவிய செவ்வானத்தையும்
தீயையும் போன்ற செம்மயிர்; பக்கம் எரிய - பக்கங்களில்விளங்க, கும்பம்
உற்ற உயர் நெற்றியின் விசித்து -
குடம் போன்ற மத்தகங்கள்உயர்ந்த
நெற்றியில் கட்டப் பெற்ற; ஒளி குலாம் உம்பருக்கு அரசன் மால் கரியின்
ஓடை -
ஒளி வீசும் தேவர்கட்கு அரசனான இந்திரனின் பெரிய ஐராவதம்
எனும் யானையின் நெற்றிப்பட்டம்; எயிறு ஒண் - அந்த யானையின்
தந்தங்களில் பூட்டிய ஒளி மிக்க; கிம் புரி- பூண்கள்; பெரிய தோள்
வளையொடும் -
பெரிய வாகுவலயத்துடன்; கிளர - விளங்க; ஏ - ஈற்றசை.

     செம்பட்டை மயிர் உடற்புறத்தே தொங்கிய விராதனுக்கு ஐராவதத்தின்
ஓடை நெற்றிப்பட்டமாகவும், கிம்புரி வாகுவலயமும் ஆயின, பம்புதல் -
பரத்தல், உற்ற - உவமஉருபு.                                    12

2529.தங்கு திண் கரிய காளிமை
     தழைந்து தவழ,
பொங்கு வெங் கொடுமை என்பது
     புழுங்கி எழ, மா
மங்கு பாதகம், விடம், கனல்,
     வயங்கு திமிரக்
கங்குல், பூசி வருகின்ற கலி
     காலம் எனவே

    தங்கு திண் கரிய காளிமை - பொருந்திய வலிய மிகுந்த கறுப்பு;
தழைந்து தவழ - செழித்து விளங்க, பொங்குவெங்கொடுமை என்பது -
மேற்கிளம்பும் பெரும் கொடுமை எனும் தீயபண்பு; புழுங்கி எழ -கோபித்து
மேற்கிளம்ப; மங்கு மா பாதகம் - மிகக்கேட்டை உண்டாக்கும்
பெரும்பாவமும்; விடம் கனல் - நஞ்சும் நெருப்பும்; வயங்கு திமிர -
விளங்கிச்செருக்கிய; கங்குல் பூசி வருகின்ற - இருளைப் பூசிக்கொண்டு
வரும்; கலிகாலம் என -கலிகாலம் (எதிரே உருவெடுத்து வந்தாற்) போல;
ஏ -
ஈற்றசை.