2661. | உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு, எதிர், நவமை நீங்கிய நல் தவன் சொல்லுவான்; 'அவம் இலா விருந்து ஆகி, என்னால் அமை தவம் எலாம் கொளத் தக்கனையால்' என்றான். |
உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு - உவமை கூறுவதற்கு எதுவுமில்லாத தலைவனாம் இராமன் கூறிய மொழிக்கு; எதிர் நவமை நீங்கிய நல்தவன் சொல்லுவான் - மறு மொழியாகப் புதுமை நீங்கிய (பழைய) தவத்தை உடைய சுதீக்கணமுனிவர் பின்வருமாறு கூறினார்; அவம் இலா விருந்து ஆகி - வீண் போகாத நல்லவிருந்தினன் ஆகி; என்னால் அமை தவம் எலாம் கொளத் தக்கனை என்றான் - என்னால்இதுவரை செய்தமைந்துள்ள என் தவப் பயன்கள் எல்லாவற்றையும் நீ ஏற்றுக் கொள்ளத்தக்கவன்ஆவாய் என்று கூறினான். ஆல் - அசை. தமது நற்செயல்களைப் பெரியோர் ஆண்டவனுக்குக் காணிக்கை ஆக்கும் சாத்துவிகத் தியாகம்இது எனப்படும். நவமை என்பது வட சொல்லடியாக வந்த புதுச் சொல்லாக்கம். விருந்தினர்க்குரியதகுதியாவது அறிவு ஒழுக்கங்களில் உயர்ந்து நிற்றல் - கொளத் தக்கணை' எனப் பாடம் கொண்டு -காணிக்கை (தட்சணை)யாக ஏற்றுக் கொள்க என்பர். முதனூலாம் வான்மீகத்தில் சுதீக்கணர் தாம் தவம் செய்து சம்பாதித்த இந்த உலகில்இராமன் சீதையோடும் இலக்குவனோடும் இன்பமாக இருக்குமாறு கூறுவார். இராமனோ தான் சுயமாகவேஉலகங்களைச் சம்பாதித்துக் கொள்வதாகக் கூறித் தாங்கள் வசித்தற்குரிய இடத்தை மட்டும் ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகிறான். கம்பரோ அகத்தியர் ஆச்சிரமத்திற்குச் செல்லும் வழியில்சுதீக்கணனைச் சந்தித்ததாகக் கொண்டு வரலாற்றைக் கூறுகிறார். 31 2662. | மறைவலான் எதிர், வள்ளலும் கூறுவான்: 'இறைவ! நின் அருள் எத் தவத்திற்கு எளிது? அறைவது ஈண்டு ஒன்று; அகத்தியற் காண்பது ஓர் குறை கிடந்தது, இனி' எனக் கூறினான். |
|