பக்கம் எண் :

அகத்தியப் படலம் 93

     தேனின் பிறங்கு அருவித்திரள் என்பதைத் தேனே அருவியாக
விளங்கும் மலர்வனம் எனக்கூறுவர். அங்குள்ள அருவிகளில் தேன்
பெருக்கு இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் என்பர்.சுதீக்கணரின் சோலை
பல்வேறு இனிய பழங்களையும் மலர்களையும் செடி, கொடிகளையும்
கொண்டது எனவான்மீகம் கூறும். இச்சோலையை அகத்தியர் சோலை
எனவும் கூறுவர். செல்லும் வழியில்அகத்தியரின் உடன்பிறப்பாம் சுதர்சன
முனிவர் தவவனம் உள்ளது. அதற்குத் தெற்கே அகத்தியர்ஆச்சிரமம்
உள்ளது எனச் சுதீக்கணர் இராமனிடம் கூறியதாகவும் வழியில் சுதர்சனரை
இராமன்முதலியோர் பணிந்து சென்றதாகவும் முதனூல் கூறும்.          35

2666.ஆண்தகையர் அவ் வயின்
     அடைந்தமை அறிந்தான்;
ஈண்டு, உவகை வேலை துணை
     ஏழ் உலகம் எய்த,
மாண்ட வரதன் சரண் வணங்க,
     எதிர் வந்தான்-
நீண்ட தமிழால் உலகை
     நேமியின் அளந்தான்.

    நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் - நீண்ட காலம்
உள்ள தமிழ்மொழியால் திருமால் மூவுலகை அளந்தது போல உலகை
அளந்தவனாகியஅகத்திய முனிவர்; ஆண்தகையர் அவ்வயின்
அடைந்தமை அறிந்தான் -
இராமலக்குவர்கள்அந்த இடத்தைச்
சேர்ந்ததை அறிந்தவனாகி; ஈண்டு உவகை வேலை - மேன் மேல்
பொங்கும் மகிழ்ச்சியாம் கடல்; துணை ஏழ் உலகம் எய்த - ஈரேழ்
(பதினான்கு) உலகங்களையும்அடையும் வண்ணம்; மாண்ட வரதன் சரண்
வணங்க எதிர் வந்தான் -
மாட்சிமைப்பட்டவரங்களை அருளும் இராமன்
தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்க எதிரே வந்தார்.

     சிவபெருமான் அகத்தியற்கு அருளியதாலும் தொன்று தொட்டு அடியார்
பலர் இறைவனைத் துதித்ததுஇம்மொழியினால் ஆதலாலும் 'நீண்ட தமிழ்'
என்றார். சிவபெருமான் இலக்கணம் உபதேசித்துத்தெற்கே அதை வளர்க்கச்
செய்ததால் அகத்தியன் தமிழால் உலகை அளந்தான் என்றார்.

     நேமி - திருமால். அவன் தன் திருவடியால் நீண்ட உலகை அளந்தது
போல் தமிழால்அகத்தியர் இவ்வுலகை அளந்தார். அளந்தமை என்பது
அறிவுச் செல்வங்களை எல்லாம் அம்மொழியில்உண்டாக்கியது. மக்கள்
அறிவன யாவற்றையும் தமிழ் கொண்டே அறியுமாறு அதனை வளமுறச்
செய்தார்.பதினான்கு உலகங்களும் உவகை எய்தியது என்பது இனி
இராவணனால் பட்ட துன்பம் இராமனால் தீரப்போகிறது என்று
எண்ணியதால் ஆகும். அல்லது முனிவர் கொண்ட மகிழ்ச்சி எல்லா
உலகங்களிலும்பரவியது என்பர். மாண்ட வரதன என்பதை
அகத்தியர்க்காக்கி அவர் திருவடியில் இராமன் வணங்கஎன்றும் பொருள்
காண்பர்.