பக்கம் எண் :

96ஆரணிய காண்டம்

அடையாமல் (இவ்விந்த மலையைக்) கடந்து போகும் வழி எது என்று
(தேவர்கள்) அந்த அகத்தியரைக்கேட்க; அடியின் மிதித்து ஏறி - தம்
காலடியால் மிதித்து அம்மலை மேல் ஏறி; மேகநெடுமாலை தவழ் விந்தம்
எனும் -
பெரிய மேகங்கள் நீண்ட வரிசையில் படிந்துள்ள விந்தியமலை
எனப்படும்; விண் தோய் நாகம் அது - வானம் அளாவி உயர்ந்த
மலையானது; நாகம்உற - பாதாள உலகைச் சென்றடையும்படி ஆழ்ந்து
போக; நாகம் என நின்றான் - ஒருயானை போலப் பெருமிதத்துடன்
நின்றான்.

     யோகமுறு பேர் உயிர் என்பதற்கு முயற்சியை மேற்கொண்டு வாழும்
பெரும் கணக்கில் உள்ளஉயிர்கள் என்பர். நாகம் - பல பொருள் குறித்த
ஒரு சொல். விசுவாமித்திரர் விருப்பப்படிஇராமன் சீதையை மணக்க வேண்டி
வில்லை ஒடிக்க எழுந்து சென்ற போது 'நாகமும் நாகமும் நாணநடந்தான்'
(697) என்ற அடியையும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இது சொல் பின்
வருநிலை அணி.

அகத்தியர் விந்தம் அடக்கிய வரலாறு:

    விந்திய மலை மற்றெல்லா மலைகளிலும் தான் உயரக் கருதி வானளாவி
உயர்ந்தது. அதனால்கதிரவன், மதி, விண்மீன்கள் ஆகியவை வானில்
செல்லும் வழி தடுக்கப் பெற்றது. அது கண்டுதேவரும் முனிவரும்
அகத்தியரை விந்தியமலையை அடக்குமாறு வேண்டினர். அவர் அம்
மலையிடம் தான்வடக்கேயிருந்து தென் திசைக்குச் சென்று மீளும் அளவு
அவ்வாறே குறுகிக் கிடக்கக் கூறிச்சென்றார். அதுமுதல் அதன் வளர்ச்சி
குன்றியது என்பது புராண வரலாறு.                               39

2670.மூசு அரவு சூடு முதலோன்,
     உரையின், 'மூவா
மாசு இல் தவ! ஏகு' எனவடாது
     திசை மேல்நாள்
நீசம் உற, வானின் நெடு மா
     மலயம் நேரா,
ஈசன் நிகர் ஆய், உலகு சீர்
     பெற இருந்தான்.

    மேல்நாள் வடாது திசை நீசம் உற - முன்னொரு காலத்தில்
வடக்குத் திசை கீழே தாழ்ந்து போக; மூசு அரவு சூடு முதலோன் -
நெருக்கமாகப் பல பாம்புகளை அணிகலன்களாகத் தரித்த சிவபெருமான்;
மூவா மாசு இல் தவ - முதிர்ந்தும் தளராத குற்றமில்லாத தவத்தை உடைய
அகத்தியனே!; ஏகு என - நீ தென்திசைக்குச் செல்வாயாக என்று கூற;
உரையின் - அக்கட்டளைப்படி; வானின் நெடுமாமலயம் நேரா -
விண்ணளவு உயர்ந்த நீண்ட பெரிய மலயமலையை அடைந்து; ஈசன் நிகர்
ஆய்உலகு சீர் பெற இருந்தான் -
சிவபெருமானுக்கு ஒப்பாக உலகம்
தாழாது சமனிலை அடைய அங்குத்தங்கியிருந்தான்.