களால்- அந்தக் கைகளால்;உடல் கடைந்தனன் - (சுக்கிரீவனது) உடலைத் தாக்கிக் கலக்கினான் (வாலி);இவன் உலைந்தனன் -சுக்கிரீவன் பெரிதும் வருந்தினான். வாலியின் சினத்திற்குக் குரக்கினம் முழுவதும் குடல் கலங்கி அஞ்சி நடுங்கின. பாற்கடலைக் கடைந்த வாலியின் கைகளுக்குச் சுக்கிரீவன் உடம்பைக் கலக்குதல் எளிது. ஆதலின் 'கடல் கடைந்த அக்கரதலங்களால் உடல் கடைந்தனன்' என்றான். உடல் கடைதல் - உடம்பைத் தாக்கி உறுப்புகள் கலங்குமாறு செய்தல். கொடுமையான வார்த்தைகளைப் பேசியதோடு வாலி சுக்கிரீவனைத் தாக்கவும் செய்தான் என அவன் கொடுமையை இராமனுக்கு அனுமன் உணருமாறு கூறினான். உடல் கடைதல்; இதன்கண் அமைந்த (வினைப்) படிமம்கருதத்தக்கது. 64 | 3850. | 'பற்றி, அஞ்சலன் பழியை - வெஞ் சினம் முற்றி நின்ற, தன் முரண் வலிக் கையால், எற்றுவான் எடுத்து எழுதலும், பிழைத்து, அற்றம் ஒன்று பெற்ற, இவன், அகன்றனன். |
பற்றி -வாலி சுக்கிரீவனைப் பிடித்துக் கொண்டு;பழியை அஞ்சலன் - (தம்பியை வருத்துவதால் ஏற்படும்) பழிக்க அஞ்சாதவனாய்;வெஞ்சினம் முற்றிநின்ற -கொடிய கோபம் மிக்கு நின்ற;தன் முரண் வலிக்கையால் - தனது மிக்க வலிமையுடைய கையால்;எற்றுவான் -மோதுவதற்கு;எடுத்து எழுதலும் -உயரத் தூக்கி எழுந்த அளவில்;அற்றம் ஒன்று பெற்று - அவன் சோர்ந்திருக்கும் சமயம் ஒன்று பெற்று;இவன் பிழைத்து -இந்தச் சுக்கிரீவன் தப்பிப்பிழைத்து;அகன்றனன் -அவ்விடம் விட்டு அகன்று ஓடினான். வாலி, தன்னைப் பழிப்பரே என்ற எண்ணம் சிறிதுமின்றித் தன் தம்பியை மோதிக் கொல்ல, உயரே எடுத்த அளவில் சுக்கிரீவன் வாலி சிறிது அயர்ந்திருந்த சமயம் நோக்கித் தப்பி ஓடி வந்துவிட்டான் என்பதாம். முரண் வலி - ஒரு பொருட்பன்மொழி. மிக்க வலிமை. சுக்கிரீவனின் அச்சத்தைப் பிழைத்தால் போதுமென ஒடி அகன்ற நிலை உணர்த்தும். பழிக்கு அஞ்சாத வாலியின் கொடுமை உணர்த்தப்பட்டது. 65 வாலிக்கு அஞ்சிய, சுக்கிரீவன் இரலை மலையில் வாழ்தல் | 3851. | 'எந்தை! மற்று அவன் எயிறு அதுக்குமேல், அந்தகற்கும் ஓர் அரணம் இல்லையால்; இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் - முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால். |
|