இதனை 'அண்டமும் முற்றும் அகண்டமும் மேல்நாள் உண்டவன் ஆம்' (418) என முன்னரும் குறித்தார். 'உலகுண்ட ஒருவா' (பெரியதிருமொழி - 7. 7. 1) ''மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும், விண்ணும் விழுங்கியது மெய்யென்பர்'' (முதல்திருவந்தாதி - 10) என்ற அடிகள் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கன. ஆம்பல் அம் போது - அம் சாரியை. 'ஆயிரம் பெயருடை அமரன்' எனவும் 'அமரர்க்கு அமரன்' எனவும் கூட்டுக. அனுமன் கூறியதைக் கேட்டதும் இராமனிடம் நிகழ்ந்த மெய்ப்பாடுகள் இச் செய்யுளில் அமைந்துள்ளன. இராமனின் ஆற்றலும் வெகுளியின் வேகமும் பாடலில் புலப்படுகின்றன. 68 3854. | ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன, ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைப் பாரம் ஈந்தவன், 'பரிவு இலன், ஒருவன் தன் இளையோன் தாரம் வௌவினன்' என்ற சொல் தரிக்குமாறு உளதோ? |
ஈரம் நீங்கிய -அன்பு நீக்கிய;சிற்றவை -சிறிய தாயாகிய கைகேயி; சொற்றனள் என்ன - சொன்னாள் என்று;ஆரம் வீங்கு தோள் - முத்துமாலை அணிந்த பருத்த தோள்களை உடைய;தம்பிக்கு -தம்பியாகிய பரதனுக்கு;தன் அரசு உரிமைப் பாரம் -தனக்கே உரித்தான அரசபாரத்தை; ஈந்தவன் -அளித்தவனான இராமன்;பரிவு இலன் ஒருவன் -''அன்பில்லாத ஒருவன்;தன் இளையோன் தாரம் -தன் தம்பியின் மனைவியை; வௌவினன்- கவர்ந்து கொண்டான்;என்ற சொல் -என்ற வார்த்தையை; தரிக்குமாறு உளதோ -(கேட்டுப்)பொறுத்திருக்கும் தன்மை உண்டாகுமோ? (ஆகாது). இராமன் மாட்டு இயல்பாக அன்பு கொண்ட கைகேயி கூனியின் சூழ்ச்சியால் மாறியதால் 'ஈரம் நீங்கிய சிற்றவை' என்றார். ஆட்சியுரிமை மூத்தவனான இராமனுக்கே உரித்து ஆதலின் 'தன் அரசுரிமை' எனப்பட்டது. இச்செய்யுளால் தம்பி மாட்டு அன்பில்லாது, அவன் தாரத்தையும் கவர்ந்த கொடிய செயலே மனைவியை இழந்த இராமன் வாலிபால் கொண்ட பகைமைக்கு முதன்மைக் காரணமாய் முன்னின்றது என்பதாம். இப்பாடல்கவிக்கூற்று. 69 3855. | 'உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி 'விலகும் என்னினும், வில்லிடை வாளியின் வீட்டி, |
|