| | மங்கையர் வடிவு என, - வருந்தும் மெய்யது; |
பொங்கு வெங்கடகரி - (அந்நீர்நிலை) மிக்க வெம்மை வாய்ந்த மதநீரையுடைய யானைகள்;பொதுவின் ஆடலின் - பொதுவாக (நீரில்) மூழ்கித் திளைத்தலால்;கங்குலின் எதிர்பொரு- இரவுக் காலத்தில் தம்முள் எதிர்ப்பட்டுச் செய்கின்ற;கலவிப் பூசலில்- புணர்ச்சிப் போரினால்;அங்கம் நொந்து -உறுப்புகள் வருந்தி;அலசிய- சோர்ந்த;ஆய்வளை விலையின் மங்கையர் - ஆய்ந்தெடுத்த வளையல்களை அணிந்த விலைமகளிரது;வடிவு என - உடம்பு போல;வருந்தும் மெய்யது-வருந்தும் வடிவுடையது. பொருள் கொடுப்பவர்க்கெல்லாம் தம்மை அளிக்கும் விலைமகளிரை உவமை கூறுதற்கு ஏற்ப, 'பொதுவின் ஆடலின்' எனப்பட்டது. மதயானைகள் பல தனித்தனியே இறங்கித் திளைத்தலால் கலங்கிய பொய்கை, ஆடவர் பலரின் புணர்ச்சிப் போரால் வருந்திய விலைமகளிரின் சோர்ந்து மெலிந்த உடம்பு போன்று காணப்பட்டது: எனவே உவமை அணி. எதிர்ந்து என்னும் வினையெச்சம் பகுதி மாத்திரையாய் நின்றது. அலசுதல் - வருந்திச் சோர்தல்: 'திரு உடம்பு அலச நோற்கின்றான்'(2749) 11 | 3720. | விண் தொடர் நெடு வரைத் தேனும், வேழத்தின் வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால், உண்டவர் பெருங் களி உறலின், ஓதியர் தொண்டைஅம் கனி இதழ்த் தோன்றல் சான்றது; |
விண்தொடர் நெடுவரை - விண்ணளாவிய பெரிய மலைகளிலிருந்து; தேனும் - பெருகிவரும் தேனின் பெருக்கும்;வேழத்தின் - யானைகளின்; வண்டு உளர் - வண்டுகள் மொய்க்கும்;நறுமத மழையும் - மணமுடைய மதநீர்ப்பெருக்கும்;மண்டலால் - (மிக்குவந்து) நிறைந்ததால்;உண்டவர் - (பொய்கையின்) நீரைப்பருகியவர்கள்;பெருங்களி உறலின்- மிக்க களிப்பை அடைவதால்;ஓதியர் - (அப்பொய்கை) கூந்தலழகுடைய மகளிரின்; தொண்டை அம்கனி இதழ் - கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகள் போல;தோன்றல் சான்றது - தோன்றல் அமைந்தது. மலைத்தேனும் மதநீர்ப்பெருக்கும் பொய்கையில் வந்து கலந்துவிடுவதால் அப்பொய்கைநீர் உண்டவர்க்குக் களிப்பைத் தந்தது. அதனால் உண்டவர்க்குக் (முத்தமிடுவார்க்குக்)களிப்பைத்தரும் மகளிர் இதழ்களை ஒத்து விளங்கியது பொய்கை - உவமை; மகளிர் இதழ்க்குத் தொண்டைக்கனி உவமை; எனவே உவமையணி. 'விண்தொடர் நெடுவரை'- உயர்வு நவிற்சி அணியாகும்; வரை - இருமடி ஆகுபெயர். 12 |