பக்கம் எண் :

பம்பை வாவிப் படலம்13

3721.ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒரு வழிப் புகுந்தது ஆம் என,
ஓர்கில கிளவிகள் ஒன்றோடு ஒப்பு இல,
சோர்வு இல, விளம்பு புள் துவன்றுகின்றது;

     ஆரியம் முதலிய - வடமொழி முதலான; பதினெண் பாடையில் -
பதினெட்டு மொழிகளில்;பூரியர்- புலமை இல்லாத புல்லறிவாளர்;ஒருவழி-
ஓரிடத்தில்;புகுந்தது ஆம் என - கூடி ஆரவாரிப்பது போல;ஓர்கில
கிளவிகள் -
(இன்ன பறவையின் குரல் என) ஆராய்ந்து அறிதற்கியலாத
ஒலிகள்;ஒன்றோடு ஒப்பு இல- ஒன்றோடொன்று தொடர்பு இல்லாதவனாய்;
சோர்வு இல விளம்பும்
- ஓய்தலின்றி ஒலிக்கும்;புள் துவன்றுகின்றது -
பறவைகள் நெருங்கியிருக்கப் பெற்றது. (அப்பொய்கை).

     ஆரியம் முதலிய மொழிகளில் புலமை இல்லாதவர்கள் ஓரிடத்திலிருந்து
எவர்க்கும் புரியாத வகையில் ஆரவாரிப்பது போலப் பல்வேறு பறவைகள்
பொய்கையில் ஒருங்கிருந்து பிரித்து உணர முடியாத வகையில் ஓய்வில்லாது
ஒலித்தன; உவமை அணி; பல பறவைகளின் குரல் தெளிவாகப் பிரித்து அறிய
முடியாது இருப்பதால், பலபகுதிகளிலிருந்து பல மொழி பேசுவோரின்
ஆரவாரத்தை உவமையாக்கினார். ஆரியம் - வடமொழி; பாடை - பாஷா
என்னும் வட சொல்லின் திரிபு; கிளவி - பேச்சு - ஒலி; விளம்புதல் -
பேசுதல்- ஒலித்தல்; புள் - பறவை. பறவைகளின் ஒலிகளுக்கு மொழிகள்
ஒலிகள்(சீவக 93) பூரியர் - தம்மைப் பெரியராய்க் கருதும் அற்பர். 'சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து' என்பது குறள் (978)                   13

3722.தான் உயிர் உறத்
     தனி தழுவும் பேடையை,
ஊன் உயிர் பிரிந்தென,
     பிரிந்த ஓதிமம்,
வான் அரமகளிர்தம்
     வயங்கு நூபுரத்
தேன் உகு மழலையைச்
     செவியின் ஓர்ப்பது;

     தான் உயிர்உற -தன்னை உயிர்போல (நினைத்து);தனி தழுவும்
பேடையை -
சிறப்பாகத் தழுவிக் கொள்ளும் பெண் அன்னத்தை;ஊன்
உயிர் பிரிந்தென-
உடலிலிருந்து உயிர் பிரிந்தாற்போல;பிரிந்த ஓதிமம் -
பிரிந்த ஆண் அன்னம்;வான் அரமகளிர்தம் - (நீராட வரும்) தேவ
மகளிரின்;வயங்கு நூபுரம் - விளங்குகின்ற காற் சிலம்பணிகளின்;தேன்
உகு மழலையை
- தேன் போன்ற இனிய ஓசையை;செவியின் ஓர்ப்பது -
(தன் பெடையின் குரல் என்று) செவி கொண்டு கூர்ந்து கேட்பதற்கு
(அப்பொய்கை) இடமாயது.