களை;பூண்டு -ஏற்று;சென்னை மேல் கொளூஉ -தலைமேல் கொண்டு; அருக்கன் சேய் -சூரியன் மகனான சுக்கிரீவன்;இவை இவை செப்பும் - இன்னின்ன வார்த்தைகளைச் சொல்லலானான். இராமன் அறம் அல்லதைச் செய்யான் என்ற நம்பிக்கையால் அவர்களது அச்சம் நீங்கியது. அவன் அறத்திற்குத் துணையாயிருப்பவன், அறத்தை நிலை நாட்ட வல்லன் என்பதை ''அறம் தரு வள்ளல்'' ''மெய்யற மூர்த்தி'', அறந்தரு சிந்தை என் ஆவி நாயகன்'' என்னும் தொடர்களும் (3372, 5882, 5102) உணர்த்தும். ''உண்டு எனும் தருமமே உருவமா உடையநிற் கண்டு கொண்டேன்'' (4066). 'அறைகழல் இராமனாகி அறநெறி நிறுத்த வந்தது'' (4073) என்னும் வாலியின் கூற்றும் ஒப்பு நோக்கத்தக்கன. யாவரும் எவையும் நோக்கினர்: உயர்திணையோடு சேர்ந்த அஃறிணைப் பொருளும் உணர்திணை வினை கொண்டது. கழல் தாமரை - கழலணிந்த தாமரை போன்ற அடி. இஃது இல்பொருள் உவமை. தாமரை இங்கு உவமை ஆகுபெயர். கொளூஉ - செய்யூ என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம்; இவை, இவை - அடுக்குத் தொடர்; மிகுதியும் பல் வகைமையும்குறித்தது. 18 சுக்கிரீவன் இராமனைப் புகழ்ந்துரைத்தல் கலிவிருத்தம் 3883. | 'வையம் நீ! வானும் நீ! மற்றும் நீ! மலரின்மேல் ஐயன் நீ! ஆழிமேல் ஆழி வாழ் கையன் நீ! செய்ய தீ அனைய அத் தேவும் நீ! நாயினேன், உய்ய வந்து உதவினாய், உலகம் முந்து உதவினாய்! |
வையம் நீ -நிலமும் நீயே! வானும் நீ -ஆகாயமும் நீயே!மற்றும் நீ -ஒழிந்த பூதங்களாகிய நீர், காற்று, தீ என்பனவும் நீயே!மலரின் மேல் ஐயன் நீ -தாமரை மலரின் மேல் விளங்கும் பிரமதேவனும் நீயே!ஆழிமேல் -பாற்கடல் மேல் பள்ளி கொண்ட!ஆழிவாய் கையன் நீ -சக்கரப்படை தாங்கிய கையுடைய திருமாலும் நீயே!செய்ய தீ அனைய- சிவந்த நெருப்பினை ஒத்த;அத்தேவும் நீ -அந்த சிவபிரானும் நீயே!உலகம் முந்து உதவினாய் - உலகங்களை எல்லாம் முற்காலத்தில் படைத்தருளினாய்; நாயினேன் உய்ய -நாய் போன்றவனாகிய நான் நற்கதி அடையும் பொருட்டு;வந்து உதவினாய் -என்னை நாடி வந்து அருள் புரிந்தாய். இராமனின் வில்லாற்றலை நேரில் கண்ட சுக்கிரீவன் 'இவன் அனுமன் கூறியாங்கு முழுமுதற் கடவுளாகிய திருமாலின் அவதாரமே' எனத் தெளிந்து இராமனைப் பலவாறு போற்றலாயினன். இராமன் மும்மூர்த்தியாய் விளங்கும் பரம்பொருளே என்பதைத் தண்டகாரணியத்து முனிவர்கள், விராதன், இந்திரன், கவந்தன், சவரி, வாலி ஆகியோர் இராமனைப் போற்றும் பாடல்களில் காண |