என்கோ -பிரிவுத் துயரால் வெப்பமுற்று வாடினான் என்று சொல்வேனோ? அவ்வழி - அப்பொழுது;தீர்த்தனை யாது செப்புகேன் -தூயவனான இராமன் நிலை பற்றி என்ன சொல்வேன்? மயிர்ப்புளகம் புறம் போர்த்தலும், தோள் பொங்குதலும் மகிழ்ச்சியாலும், வியர்த்தலும் வெதும்பலும் துன்பத்தாலும், கண்ணீர் வெள்ளம் பெருகுதல் இரண்டினாலும் விளையக்கூடிய மெய்ப்பாடுகளாம். அவையனைத்தையும் இராமன் ஒருங்கே பெற்றதால் அவன் மகிழ்ந்தானா? அல்லது துன்புற்றானா என ஒன்றைத் துணிந்து கூற இயலாமல் போனதால் 'யாது செப்புகேன்' என்றார். தீர்த்தன் - தூயவன். இராமனைத் 'தீர்த்தன்' என்று அனுமனும் குறித்தல் (5415) காண்க. இப்பாடலில் முதலடி உயர்வு நவிற்சி அணி பொருந்தியது. இறுதி இரண்டு அடிகளில் ஐய அணிஅமைந்துள்ளது. 9 சுக்கிரீவன் தேற்றுதல் 3910. | விடம் பரந்தனையது ஓர் வெம்மை மீக்கொள, நெடும் பொழுது, உணர்வினோடு உயிர்ப்பு நீங்கிய தடம் பெருங் கண்ணனைத் தாங்கினான், தனது உடம்பினில் செறி மயிர் சுறுக்கென்று ஏறவே. |
விடம் பரந்து அனையது ஓர் வெம்மை -(உடம்பில்) நஞ்சு பரவினால் போன்றதொரு வெப்பம்;மீக்கொள -மிகுதலால்;நெடும் பொழுது -நீண்ட நேரம்;உணர்வினோடு உயிர்ப்பு- அறிவும் மூச்சும்;நீங்கிய - நீங்கிக் (கீழே விழுபவனான);தடம் பெருங் கண்ணனை -மிகப்பெரிய கண்களை உடைய இராமனை;தனது உடம்பினில் -தனது உடம்பில்; செறிமயிர் சுறுக்கென்று ஏறவே -பொருந்திய முடி சுருக்கென்று அவன் உடம்பில் தைக்கும்படி;தாங்கினான் -(சுக்கிரீவன்) தாங்கிக் கொண்டான். நஞ்சு பரவுதல் விரைவில் நடைபெறுவதுபோல், பிரிவுத் துயரால் ஏற்பட்ட வெப்பம் விரைந்து தாக்கியதால் இராமன் உணர்வும், உயிர்ப்பும் நீங்கிய நிலையை அடையலுற்றான், சுக்கிரீவன் உடம்பிலுள்ள மயிர்களின் வன்மையும் இராமனது மென்மையும் பற்றித் 'தனது உடம்பினில் செறிமயிர் சுருக்கென்று ஏற' என்றார். பரந்தது அனையது என்பது பரந்தனையது என்று விகாரமாயிற்று. தடம் பெரும் - ஒரு பொருட்பன்மொழி. 10 3911. | தாங்கினன்இருத்தி, அத் துயரம் தாங்கலாது ஏங்கிய நெஞ்சினன், இரங்கி விம்முவான் - |
|