பக்கம் எண் :

16கிட்கிந்தா காண்டம்

கமலத்தவளை -அந்த மணம்மிக்க செந்தாமரை மலரிலுள்ள திருமகளை
(சீதையை);ஈகிலம் -கொண்டு வந்து சேர்க்கும் திறமை இல்லோம்;ஆவது
செய்தும் -
(எனினும்) இயன்ற உதவியைச் செய்வோம் என்று;அருளால் -
இரக்கத்தால்;அன்னங்கள் -(அப் பொய்கையில் உள்ள) அன்னங்கள்;
திவள -
துவளும்படியாக;திரு நடை காட்டுவ - (சீதையின்) நடையழகைக்
காட்டுவனவாயின;குவளை -குவளை மலர்கள்;செங்கண் காட்டுவ -
செவ்விய கண்களின் அழகைக் காட்டுவனவாயின;குமுதம் -குமுதமலர்கள்;
துவர் இதழ் காட்டுவ -
செந்நிறம் வாய்ந்த இதழின் அழகைக்
காட்டுவனவாயின.

     சீதையைக் கொண்டு வந்து சேர்க்கும் திறன் இல்லாததால், இயன்ற
உதவியைச் செய்வோம் எனக்கருதி அன்னங்கள் சீதையின் நடையழகையும்,
குவளை விழியழகையும், குமுதம் இதழழகையும் காட்டின.

     யானை அன்னான் - இராமன்.  கம்பீரமான தோற்றம், நடை, வலிமை
பற்றி யானை உவமையாயிற்று.  திருமகளே சீதையாக அவதரித்ததால்
'கமலத்தவள்' எனப்பட்டனள்.  ''போதினை வெறுத்து அரசர் பொன்மனை
புகுந்தாள்'' என்றார் முன்னரும்.  (1151) கவளம் : வாயளவு கொண்ட
உணவுத்திரள். பாடல் தற்குறிப்பேற்ற அணி.                         17

3726.பெய் கலன்களின் இலங்கு
     ஒளி மருங்கொடு பிறழ,
வைகலும் புனல் குடைபவர்
     வான் அரமகளிர்;
செய்கை அன்னங்கள் ஏந்திய
     சேடியர் என்னப்
பொய்கை அன்னங்கள் ஏந்திய பூங்
     கொம்பர் பொலிவ.

     பெய்கலன்களின் இலங்கு ஒளி -தான் அணிந்திருந்த
அணிகலன்களின் விளங்குகின்ற ஒளியானது;மருங்கொடு பிறழ -
எல்லாப்பக்கங்களிலும் ஒளி வீச;வைகலும் புனல்குடைபவர் -நாள்தொறும்
புனலில் துளைந்து நீராடுபவாகளாகிய;வாள் அர மகளிர் -தேவ மகளிரின்;
செய்கை அன்னங்கள் -
 (விளையாடுவதற்காகச்) செய்யப்பட்ட செய்கை
அன்னங்களை;ஏந்திய சேடியர் என்ன -கைகளில் ஏந்தி நிற்கும் தோழியர்
போல;பொய்கை அன்னங்கள் -பொய்கையிலுள்ள அன்னங்களை;ஏந்திய
பூங்கொம்பர் -
ஏந்தி நிற்கின்ற மலர்க்கொம்புகள்;பொலிவ -விளங்கின.

     தேவமகளிர் புனலில் குடைந்து ஆடியதால் அஞ்சி பொய்கை
அன்னங்கள் அஞ்சி எழுந்து அருகில் உள்ள மலர்க்கொம்புகளில் தங்கின.
அதனால் செயற்கை அன்னங்களைக் கையில் ஏந்திய தேவமகளிரின்
தோழியர்போல மலர்க்கொம்புகள் காட்சி அளித்தன.  பொய்கை
அன்னத்திற்குச் செய்கை அன்னமும் கரையிலுள்ள மலர்க்கொம்புகளுக்கு
தோழியரும் ஒப்பு.  இஃது உவமை அணியாம்.