| | பன்னஅருங் கதிரவன் புதல்வன், பையுள் பார்த்து, அன்ன வெந் துயர் எனும் அளக்கர் நீக்கினான். |
என்ன நொந்து -என்று மனம் வருந்தி; இன்னன பன்னி - இத்தகைய வார்த்தைகளைச் சொல்லி;ஏங்கி -ஏக்கம் உற்று;துன்ன அரும் துயரத்து -அடைதற்கரி துன்பத்தால்;சோர்கின்றான் தனை -மனம் தளர்கின்ற இராமனை;பன்ன அரும் கதிரவன் புதல்வன் - புனைந்து கூறுதற்கரிய கதிர்களை உடைய சூரியன் மகனான சுக்கிரீவன்;பையுள் பார்த்து -(அவன் அடைந்த) துன்பத்தைப் பார்த்து;அன்ன வெந்துயர் எனும் அளக்கர் -அத்தகைய கொடிய துன்பம் என்கின்ற கடலினின்று; நீக்கினான் - கரை ஏற்றினான். பையுள் - துன்பம், அளக்கர் - கடல். அளத்தற்கரியது எனும் பொருள் தரும். துயரெனும் அளக்கர் - உருவக அணி; பன்னுதல் - திரும்பத்திரும்பச் சொல்லுதல். 26 'நின் குறை முடித்தன்றி வேறு யாதும் செய்கலேன்' என இராமன் கூறுதல் | 3927. | 'ஐய,நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது, உய்வெனே? எனக்கு இதில் உறுதி வேறு உண்டோ? வையகத்து, இப் பழி தீர மாய்வது செய்வேன்; நின்குறை முடித்து அன்றிச் செய்கலேன்.' |
ஐய- அன்பனே! நீ ஆற்றலின்- நீ ஆறுதல் கூறியதால்;ஆற்றினேன் அலது - (எனது துன்பத்தை ஒருவாறு) தணித்துக் கொண்டேனே அல்லாமல்; உய்வென -(இப்பழி வந்தபின்) உயிர் தாங்கியிருப்பேனோ?எனக்கு இதில் உறுதி -எனக்குச் சாவினும் நல்லது;வேறு உண்டோ -வேறு உண்டோ (இல்லை);வையகத்து இப்பழி தீர -இவ்வுலகத்தில் எனக்கு ஏற்படும் இப்பழி நீங்க;மாய்வது செய்வென் -இறந்து போவேன்;நின்குறை முடித்தன்றி - (ஆனால்) உன்னுடைய குறையை முடித்துத் தராமல்;செய்கலேன் - (அவ்வாறு செய்யமாட்டேன். பழி நீங்க இறந்து படுதல் தன்னைப் பொறுத்தவரையில் ஏற்றது எனினும், சுக்கிரீவனுக்கு வாக்குக் கொடுத்தபடி அவன் மனைவியைக் கவர்ந்தவனைக் கொன்று அவளை மீட்டுத் தந்த பிறகே அச்செயலைச் செய்வதாகக் கூறுவது இராமன் கொண்ட வாய்மைப் பெருமையை உணர்த்தும். சுக்கிரீவன் இராமன் |