பக்கம் எண் :

162கிட்கிந்தா காண்டம்

குறை தீர்த்தலையே முதன்மையாகக் கருதியது போல (3918) இராமனும்
சுக்கிரீவன் துயர் நீக்க எண்ணியது நல்ல நட்பின் இயல்பை உணர்த்துகிறது.

     அன்பின் முதிர்ச்சியால் இராமன் சுக்கிரீவனை 'ஐய'! என்று விளித்தான்;
இலக்குவனை 'ஐய' (1736) என்றது போல. இப்பழி என்றது, சீதையின் துயரம்
போக்காமையால் தனக்கு வரக்கூடிய பழியை. நின்குறை என்பது சுக்கிரீவன்
அடைந்த துன்பம்.  வாலி, மனைவியையும் ஆட்சியினையும் கவர்ந்து கொண்ட
நிலை.  அக்குறை முடித்தலாவது - வாலியைக் கொன்று, சுக்கிரீவன்
மனைவியையும் அரசுரிமையினையும் மீட்டுத் தருதலாகும்.  உய்தல் - உயிர்
தாங்கியிருத்தல்; உறுதி - நல்லது.  உய்வெனே, உண்டோ - ஏகார ஓகாரம்
எதிர்மறைப் பொருளன.  பிறர் துயர் நோக்கும் சான்றோர் பண்பை இப்பாடல்
உணர்த்துகிறது.                                                27

அனுமன், இராமனை நோக்கிப் பேசுதல்

3928.என்றனன் இராகவன்;
      இனைய காலையில்,
வன் திறல் மாருதி
      வணங்கினான்; 'நெடுங்
குன்று இவர் தோளினாய்!
      கூற வேண்டுவது
ஒன்று உளது; அதனை நீ
      உணர்ந்து கேள்!' எனா,

     என்றனன்இராகவன் -என்று கூறினான் இராமன்;இனைய
காலையில்-
இந்தச் சமயத்தில்;வன்திறல் மாருதி -மிக்க வலிமை
வாய்ந்த அனுமன்;வணங்கினான் -(இராமனைத்) தொழுது;நெடுங் குன்று
இவர் தோளினாய்-
பெரிய மலையை ஒத்த தோள்களை உடையவனே!
கூற வேண்டுவது -
'நான் உன்னிடம் கூற வேண்டியது;ஒன்று  உளது -
ஒன்று உண்டு;அதனைநீ உணர்ந்து கேள் எனா -அதை நீ கவனித்துக்
கேட்பாயாக' என்று . . . .

     இது முதல் 34வது பாடல் முடியக் குளகமாய் ஒரு தொடராய் இயைந்து
வினை முடிபு கொள்ளும். வல்திறல் - ஒரு பொருட் பன்மொழி; இவர்தல் -
ஒத்தல்.  தான் சொல்ல இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது என்பதால்
'உணர்ந்து கேள்' என்றான்.                                     28

3929.'கொடுந் தொழில் வாலியைக்
      கொன்று, கோமகன்
கடுங் கதிரோன் மகன்
      ஆக்கி, கை வளர்
நெடும் படை கூட்டினால்
      அன்றி, நேட அரிது,
அடும் படை அரக்கர்தம்
      இருக்கை - ஆணையாய்!