லால் அலங்கலார்க்கு, ஈது அடுப்பது அன்று ஆம் அரோ'' (4049) என இராமன் வாலியிடம் உரைப்பதை ஒப்பு நோக்கலாம். 'ஊனுடை' என்பதற்குக் 'குறைபாடு உடைய' என்றும் பொருள் கொள்வர். 30 | 3931. | 'எவ் உலகங்களும் இமைப்பின் எய்துவர், வவ்வுவர், அவ் வழி மகிழ்ந்த யாவையும்; வெவ் வினை வந்தென வருவர், மீள்வரால்; அவ் அவர் உறைவிடம் அறியற்பாலதோ? |
இமைப்பின் -(அவ்வரக்கர்கள்) கண் இமைக்கும் நேரத்தில்;எவ் உலகங்களும் -எல்லா உலகங்களையும்;எய்துவர் - சென்று அடைவர்; அவ்வழி -தான் சென்ற அவ்விடங்களில்;மகிழ்ந்த யாவையும் -தாம் விரும்பிய பொருள்கள் எல்லாவற்றையும்;வவ்வுவர் -வலிந்து கவர்ந்து கொள்வர்;வெவ்வினை வந்தென - (செய்த செயல்களுக்கேற்பப் பயனூட்ட வரும்) கொடிய வினை வந்தது போல;வருவர் -(வருத்த)வருவர்;மீள்வர் - அவ்வினை, பயனை ஊட்டியபின் செல்வது போல, உயிர்களை வருத்திய பின்னர்த் திரும்பிச் செல்வர்;அவ் அவர் உறைவிடம் -அத்தன்மையை உடைய அரக்கர்கள் வாழும் இருப்பிடம்;அறியற்பாலதோ -நம்மால் அறியக்கூடியதோ? (அன்று). அரக்கர் தாம் வேண்டும் இடத்திற்கு வேண்டியபோது சென்று பிறரை வருத்தி மீளும் இயல்பினராதலின் அவர்கள் தங்குமிடம் கணித்தற்கரிதாகின்றது. 'இமைப்பின்' என்பது காலவிரைவைக் காட்டிற்று; இமைப்பு - கண் இமைக்கும் கால அளவு. உயிர்களை அவை செய்தவினை தொடரும் என்பதைச் 'செல்லுறுகதியின் செல்லும் வினை எனச் சென்றதன்றோ' (28); என முன்னும் கூறப்பட்டது. 'தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தே தற்செய்த கிழவனை நாடிக் கொளற்கு' என்பது (101) நாலடியார். இங்கு அரக்கர்க்கு வெவ்வினை உவமையாயிற்று. 31 | 3932. | 'ஒரு முறையே பரந்து உலகம் யாவையும், திரு உறை வேறு இடம் தேரவேண்டுமால்; வரன்முறை நாடிட, வரம்பு இன்றால் உலகு; அருமை உண்டு, அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால். |
உலகு வரம்பு இன்று -உலகம் எல்லையற்றதாக விரிந்துள்ளது; வரன்முறை நாடிட -(அரக்கர்களை) வரிசைப்படி ஒவ்வோர் இடமாகத் தேடுவதில்;அருமை உண்டு -இடர்ப்பாடு உண்டு;அளப்ப அரும் ஆண்டும் வேண்டும் -(அவ்வாறு தேடுதற்கு) அளவற்ற ஆண்டுகள் |