பொய்கையில் மலர்ந்துள்ள தாமரையும் குவளையும் பிராட்டியின் கண் போல் இருந்ததால் இராமனின் புண்பட்ட நெஞ்சிற்கு மருந்து போலாகிச் சிறிது துன்பமாற்றின. கண்ணையும் முகத்தையும் காட்டுகின்ற பொய்கை முழு வடிவையும் காட்ட வேண்டும் என வேண்டினான். தாமரை மலர், குவளை மலர் என்று உவமானப் பொருள்களைக் கூறியதற்கேற்ப, முகமும் கண்ணும் என்னாது, கண்ணும் முகமும் எனக் கூறியது எதிர்நிரல்நிறை அணியாகும். உலோவினோர்- விணையாலணையும் பெயர்; ஓகாரம் எதிர்மறை. ''உளப்பரும் பிணிப்பறா உலோபம் ஒன்றுமே அளப்பருங்குணங்களை அழிக்கும்'' (363) என்பதால் உலோபிகள் உயர்ந்தோர் ஆகார் என்பது புலனாகும். 24 | 3733. | விரிந்த குவளை, சேதாம்பல், விரை மென் கமலம், கொடி வள்ளை, தரங்கம், கெண்டை, வரால், ஆமை என்று இத்தகையதமை நோக்கி, 'மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நிற் கண்டேன்; வல் அரக்கன், அருந்தி அகல்வான் சிந்தினவோ? ஆவி! உரைத்திஆம் அன்றே! ' |
விரிந்த குவளை- மலர்ந்த கருங்குவளை மலர்களும்;சேதாம் பல்- செவ்வாம்பல் மலர்களும்;விரைமென் கமலம்- மணம்மிக்க மென்மையான தாமரை மலர்களும்;கொடி வள்ளை -வள்ளைக் கொடியின் இலைகளும்; தரங்கம் -அலைகளும்;கெண்டை -கெண்டைமீன்களும்;வரால் -வரால் மீன்களும்;ஆமை - ஆமைகளும்;என்று இத்தகையதமை- என்னும் இத்தன்மையானவாகிய பொருள்களை;நோக்கி - (இராமன்) பார்த்து;ஆவி- பொய்கையோ!;மருந்தின் அனையாள் -அமுதம் போன்ற சீதையின்; அவயவங்கள் - (கண், வாய், முகம், காது, வயிற்று, மடிப்பு, கணைக்கால், புறவடி ஆகிய) உறுப்புகளை;நின் கண்டேன் - உன்னிடத்துப் பார்த்தேன்; அவை - அவ்வுறுப்புகள்;வல்லரக்கன் -கொடிய அரக்கனாகிய இராவணன்; அருந்தி - உண்டு;அகல்வான் - (பரந்த ஆகாயத்தில்) செல்கையில்; சிந்தினவோ- சிந்தினவைகளோ? உரைத்தி - உரைப்பாயாக. (ஆம், அன்று, ஏ -அசைகள்.) குவளை, ஆம்பல், கமலம், வள்ளை, அலை, கெண்டைமீன், வரால்மீன், ஆமை என்பன முறையே கண், வாய், முகம், காது, வயிற்றுமடிப்பு, கணைக்கால், புறஅடிக்கு உவமையாயின. கொடியும் வள்ளையும் என இரண்டாகக் கொள்ளின் கொடியால் இடையும் வள்ளையால் காதும் குறிக்கப்படும். பொய்கை மலர்களைப் பெண்கள் உறுப்புகளுக்குச் சொல்வதைப் ''பைங்குவளைக் கார்மலரால்'' (திருவெம்பாவை 13) என்ற அடியும் உணர்த்தும். குவளை முதலியவற்றைச் சீதையின் உறுப்புகளாக மயங்கினன் என்பதால் மயக்க அணி. குவளை முதலியவற்றை அரக்கன் உண்கையில் சிந்திய சீதையின் அவயவங்களாகக் கருதினன் என்பதால் தற்குறிப்பேற்ற அணி. சீதையின் அருமை பற்றி 'மருந்தின் அனையாள்' என்றார். 25 |