மொழிகின்ற -என்று சொல்கின்ற;முகத்தான் முன்னர் -முகத்தினனாகிய வாலியின் முன்னே;மறை திறம்பாத -வேத நெறியில் தவறாத;வாய்மை மன்னர்க்கு -வாய்மை ஒழுக்கத்தினரான அரசர்களுக்கென்று;முன்னம் சொல்லும் துறை -முன் மனு முதலிய நூல்களில் கூறப்பெற்ற அறநெறிகளை; திறம்பாமல் காக்க -வழுவாமல் காத்தல் பொருட்டு;தோன்றினான் - (உலகில்) தோன்றியவனான இராமன்;வந்து தோன்ற -வந்து தோன்ற . . . . இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடராய், இதன் கண் உள்ள 'தோன்ற' எனும் எச்சம் 'கண்ணுற்றான்' என அடுத்த பாடலில் வரும் வினை கொண்டு முடியும். மனு முதலிய அற நூல்கள் வேதத்தின் பொருளை ஒட்டியே எழுதப்படுவன. அரசர்களுக்குரிய நெறிமுறைகளைக் காக்கவே தோன்றியவன் இராமன். அறங்காக்கத் தோன்றியவன் என்பதை 'மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மாதவம் அறத்தொடும் வளர்த்தார்' (97) ''அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்'' (1349), 'அறம் தலை நிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைத்த நீதித், திறம் தெரிந்து, உலகம் பூணச் செந்நெறி செலுத்தி, தீயோர் இறந்து உக நூறி, தக்கோர் வாலியின் முன்னர் இராமன் தோன்றியது, தான் வாலியைத் தண்டித்தது அறநெறிக்கு ஒத்த செயலே என்பதை உணர்த்தல் பொருட்டாகும். 82 | 4017. | கண்ணுற்றான் வாலி, நீலக் கார் முகில் கமலம் பூத்து, மண் உற்று, வரி வில் ஏந்தி, வருவதே போலும் மாலை; புண் உற்றது அனையசோரி பொறியொடும் பொடிப்ப, நோக்கி, 'எண்ணுற்றாய்! என் செய்தாய்!' என்று ஏசுவான் இயம்பலுற்றான்: |
நீலக் கார் முகில் -நீலநிறமுள்ள கார்கால மேகம்;கமலம் பூத்து - தன்னிடம் பல தாமரை மலர்கள் மலரப்பெற்று;வரிவில் ஏந்தி -கட்டமைந்த வில்லை ஏந்தி;மண் உற்று வருவதே போலும் -நிலவுலகைப் பொருந்தி வருவது போலுள்ள;மாலை - திருமாலாகிய இராமனை;வாலி கண்ணுற்றான்-வாலி தன் கண்களால் கண்டான்.புண் உற்றது அனைய சோரி -புண்ணிலிருந்து வெளிப்படுவது போன்ற குருதி;பொறியொடும் பொடிப்ப -நெருப்புப் பொறிகளொடு (தன்கண்களினின்று) வெளிப்பட; நோக்கி -(சினத்தோடு) பார்த்து;எண்ணுற்றாய் -'எண்ணங்களில் நிறைந்து பொருந்தியவனே!' என் செய்தாய் -என்ன காரியம் செய்தாய்? என்று ஏசுவான் -என்று கூறிப் பழிப்பவனாய்;இயம்பலுற்றான் -சொல்லத் தொடங்கினான். இராமனது மேனி நிறத்திற்குக் கார்மேகமும், அவனுடைய முகம், கண், கை, கால் முதலிய உறுப்புக்களுக்குச் செந்தாமரை மலர்களும் உவமை. ''நீலக் கார் |