பக்கம் எண் :

வாலி வதைப் படலம் 277

ஆமை முதலிய) பிறவற்றையும் பொறுத்து;அலை கடல் கடைய
வேண்டின்-
(மீண்டும்) அலைகளை உடைய பாற்கடலைக் கடைய
வேண்டிவரின்;இனிஆர் கடைவர் - இனி யார் வந்து கடைந்து அமுது
அளிக்கவல்லவர்?(ஒருவரும் இலர்).

     அங்கதன் இப்பாடலில் தன் தாதையின் தாள் வலிமையினையும்
கைகளின் வலிமையினையும் கூறி வருந்தினான்.  ''எட்டு மாதிரத்திறுதி,
'நாளும் உற்று அட்டமூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்'' (3825) ஆதலின்
வாலி எண்திசைகளுக்குத் தாவிச் செல்கையில் அவன் கால்கள் பட்ட சுவடுகள்
எட்டுக் குல பர்வதங்களின் சிகரங்களிலும், சக்கரவாளகிரியின் சிகரத்திலும்
தழும்புகளாகப் பதிந்தன.  இப்போது வாலி இறந்தால் அத்தழும்புகள்
இலவாகும் என்பதாம்.  பாற்கடலைக் கடைவதற்கு வேணடிய மந்தர மலை,
வாசுகி முதலிய சாதனங்கள் இருந்தும் கடையும் ஆற்றல் பெற்ற வாலி
இல்லாமையால் பாற்கடலைக் கடைந்து அமுது பெறமுடியாது என்று
உரைத்தான்.  தேவர்களாலும் அசுரர்களாலும் கடைந்து எடுக்க முடியாத
அமுதத்தைத் தனி ஒருவனே கடைந்த கொடுத்த வாலியின் கைவன்மை
பின்னிரண்டடிகளில் கூறப்பட்டது.  ''சுழலும் வேலையைக் கடையும்
தோளினான்'' (3823) ''தேவர் உண்ண மந்தரப் பொருப்பால் வேலை
கலக்கினான்'' (6997) என முறையே அனுமனும் அங்கதனும் உரைப்பதும்
காண்க.  நேமிக்குன்றம் - சக்கரவாளகிரி.  இஃது இவ்வுலகத்தின்
எல்லைகளைச் சுற்றி வளைந்து அமைந்திருக்கும் மலைத் தொடர் என்ப.
வாலியின் கால்வன்மையும் கைவன்மையும் பாடலில் கூறிய நயம்காண்க. 151

4086.'பஞ்சின் மெல் அடியாள் பங்கன்
      பாதுகம் அலாது, யாதும்
அஞ்சலித்து அறியாச் செங் கை
      ஆணையாய்! அமரர் யாரும்
எஞ்சலர் இருந்தார் உன்னால்; இன்
      அமுது ஈந்த நீயோ,
துஞ்சினை; வள்ளியோர்கள், நின்னின்
      யார் சொல்லற்பாலார்?'

     பஞ்சின் மெல் அடியாள் பங்கன் -பஞ்சைக் காட்டிலும்
மென்மையான திருவடிகளை உடைய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்ட
சிவபெருமானின்;பாதுகம் அல்லது -திருவடிகளை அல்லாது;யாதும்
அஞ்சலித்து அறியா -
வேறு எதையும் வணங்கி அறியாத;செங்கை
ஆணையாய் -
சிவந்த கைகளையும் ஆணைச்சக்கரத்தையும் உடையவனே!
உன்னால் -
(அமுதம் கொடுத்த) உன்னால்;அமரர் யாரும் எஞ்சலர்
இருந்தார் -
தேவர்கள் எல்லோரும் (இறந்து போய் எண்ணிக்கையில்
குறையாமல்) நிலைத்து  வாழ்கிறார்கள்;இன் அமுது ஈந்த நீயோ -இனிய
அமுதத்தை அவர்களுக்கு வழங்கிய நீயோ;துஞ்சினை -இறந்தவனானாய்;
நின்னின் -
உன்னை விட;வள்ளியோர் கள் -வள்ளல் தன்மை
உடையவர்கள் என்று;சொல்லற் பாலார் யார் -சொல்லத்தக்கவர் வேறு
யார் இருக்கிறார்கள்? (ஒருவரும் இலர்).