பருகி, புறம் போயிற்று இராகவன்தன் புனித வாளி' (9899) என உரைப்பார். இராவணன் மார்பில் பட்ட அம்பு பாற்கடலில் தூய் நீராடி, மீண்டும் அம்பறாத் தூணியை அடைந்தது (9900) என அதற்கு அடுத்த பாடலில் கூறுதல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. அன்று, ஏ - அசைகள் 160 தாரை வாலிமேல் வீழ்ந்து புலம்பல் 4095. | வாலியும் ஏக, யார்க்கும் வரம்பு இலா உலகில் இன்பம் பாலியா, முன்னர் நின்ற பரிதி சேய் செங் கை பற்றி, ஆல் இலைப் பள்ளியானும், அங்கதனோடும், போனான்; வேல் விழித் தாரை கேட்டாள்; வந்து, அவன் மேனி வீழ்ந்தாள். |
வாலியும் ஏக -வாலியும் மேல் உலகத்தை அடைய;யார்க்கும் - எவர்க்கும்;வரம்பு இலா உலகில் இன்பம் பாலியா -எல்லையில்லாத வீடுபேறாகிய இன்பத்தை இனிதின் வழங்கி அருளும்;ஆலிலைப் பள்ளியானும் -(பிரளய காலத்தில்) ஆலின் இலையைப் படுக்கையாகக் கொண்ட (திருமாலின் அவதாரமாகிய) இராமனும்;முன்னர் நின்ற - தன் முன்னர் நின்ற;பரிதி சேய் செங்கை பற்றி- சூரியன் புதல்வனாகிய சுக்கிரீவனின் சிவந்த கைகளைப் பற்றிக் கொண்டு;அங்கதனோடும் போனான் -அங்கதனுடன் அவ்விடம் விட்டு அகன்று போனான்;வேல் விழி தாரை கேட்டாள் -வேற்படை போன்ற கண்களை உடைய தாரை வாலி இறந்த செய்தியைக் கேட்டு;வந்து அவன் மேனி வீழ்ந்தாள் -போர் நடைபெற்ற இடத்திற்கு வந்து வாலியின் உடல்மீது விழுந்தாள். வரம்பு இலா உலகம் - வீடுபேறு, காலம், இடம் என்னும் வரம்பின்றி அழிவின்றி இருப்பது. உலகமெல்லாம் அழியும் ஊழிக்காலத்தும் தான் அழிவின்றி, அவ்வுலகங்கள் எல்லாவற்றையும் தன் வயிற்றில் அடக்கி்க் கொண்டு ஆலிலை ஒன்றில் கண் வளரும் திருமாலின் அமிசமாதல் பற்றி இராமனை 'ஆலிலைப் பள்ளியான்' என்றார். இஃது இறைவனின் பரத்துவத்தை விளக்கும். 'தன் காதலன் வைகும் ஆலிலை அன்ன வயிற்றினைப் பெய்வளைத் தளிர்க்கையால் பிசையும்' (1615), ''ஆலமோ ஆலின் அடையா? அடைக் கிடந்த பாலனோ?'' (3683), 'ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே' (பெருமாள் திருமொழி 8.7) என்பன ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. விழியின் கூர்மைக்கும், ஆடவர் மன உறுதியை அழித்து வருத்தும் தன்மைக்கும் வேல்உவமை. 161 4096. | குங்குமம் கொட்டி என்ன, குவி முலைக் குவட்டுக்கு ஒத்த |
|