காய்த்து இரும்பை- இரும்பைக் காய்ச்சி;தோய்த்த -தோய்த்ததான; தண்புனல் ஒத்தது- குளிர்ந்த நீரை ஒத்தது. சீதையைப் பிரிந்து வருந்தும் இராமபிரான் நீராடிய மாத்திரத்தில் அவன் மேனியின் வெப்பத்தால் அத்தண்ணீர் கொல்லன் உலையில் காய்ச்சிய இரும்பைத் தோய்த்த நீர்போலக் கொதித்தது என்பதாம்; உவமையணி. காமமும் கனலும் தாம் சேர்ந்த இடத்தைச் சுட்டெரிக்கும் தன்மையன ஆதலால் 'தீத்த காமத்தெறுகதிர்த்தீ' என்றார்; உருவக அணி. உலகத்து நீர் நெருப்பை அவிக்க, இக்காமத்தீ அந்நீரையும் கொதிக்கச் செய்யும் இயல்புடையதென வேற்றுமைப்பட வருதலின் வேற்றுமை அணியாகும். கருமகக்கம்மியன் - கருமக(கருமா)னாகிய கம்மியன்;இரு பெயரொட்டு. நீத்தம் - வெள்ளம்; நீந்தப்படுவது என்னும் பொருளது. 36 3745. | ஆடினான், அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான், நீடு நீர்; முன்னை நூல் நெறி முறையின், நேமி தாள் சூடினான்; முனிவர்தம் தொகுதி சேர் சோலைவாய், மாடுதான் வைகினான்; எரி கதிரும் வைகினான். |
அன்னமாய் -அன்னப்பறவையின் வடிவெடுத்து;அருமறைகள் பாடினான் -அறிவதற்கு அரிய வேதங்களை (நான்முகனுக்கு) உபதேசம் செய்த திருமாலின் அவதாரமான இராமபிரான்;நீடுநீர் ஆடினான் - (அப்பொய்கையில்) மிக்க நீரில் நீராடி;முன்னை நூல்நெறி முறையின் - பழைய வேதங்களில் கூறிய நெறிப்படி;நேமிதாள் சூடினான் -திருமாலின் பாதங்களை வணங்கி;முனிவர்தம் தொகுதிசேர் -முனிவர்களின் கூட்டம் பொருந்திய;சோலைவாய் மாடுதான் -சோலையின் ஒருபக்கத்தில்; வைகினான் -தங்கியிருந்தான்;எரிகதிரும் வைகினான் -எரிக்கும் கதிர்களையுடைய கதிரவனும் மறைந்தான். திருமால் தன் திருவடிகளைத் தானே சூடினான் என்பது திருமால் தான் எடுத்த மானிடத்தோற்றத்திற்கு ஏற்றபடி, தன்னைத்தான் வணங்கினான் என்க. 'அன்னமாய் அருமறைகள் அறைந்தாய் நீ' என்று முன்னரும் (2575) கூறப்பட்டது. ''அன்னமாய் நூல் பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே' (பெரிய. திருமொழி. 9-4-2) எனும் தொடரை ஒப்புநோக்குக. இராமன் திருமாலின் அமிசமாதலின் திருமாலின் செயல்கள் இராமன் செயல்களாகக் கூறப்பட்டன. 37 சந்திரன் உதயம் 3746. | அந்தியாள் வந்து தான் அணுகவே, அவ் வயின் |
|