பக்கம் எண் :

290கிட்கிந்தா காண்டம்

 கரையாதேன் இடு பூசல் கண்டும், ஒன்று
உரையாய், என்வயின் ஊனம் யாவதோ?

     தரை மேலாய் -தரை மீது கிடப்பவனே! வரை ஆர் தோள் -
மலைகள் போல் விளங்கும் உனது தோள்கள்;பொடி ஆட வைகுவாய் -
புழுதி படியக் கிடப்பவனே!உறு தன்மை ஈது என -நீ அடைந்த கதி
இதுவோ என்று;கரையாதேன் -கரைந்துருகப் பெறாதவளாகியயான்;இடு
பூசல் கண்டும் -
(உன் எதிரில் நின்று) கதறும் அழுகையைப் பார்த்தும்;
ஒன்று உரையாய் -
(என் துயர் போக்கும் வண்ணம்) மாற்றம் ஒன்றும்
கூறினாய் அல்லை.  என் வயின் ஊனம் யாவதோ -(இவ்வாறு நீ என்னை
வெறுத்தொதுக்க) என்னிடத்தில் உள்ள குற்றம் யாதோ?

     பொடியாடல் - தூசி படிந்திருத்தல்.  மலை போன்ற தோளினை ''வரை
சேர் தோளிடை'' (4098) என முன்னரும் கூறியது காண்க.  தன் துயர் பொறா
வாலி, இப்பொழுது தன் துயர் நீக்கும் வண்ணம் பேசாதிருத்தலை நோக்கித்
தாரை 'என்னிடம் உள்ள குற்றம் யாதெனக் கேட்டுப் புலம்பினாள்.  'என்னுறு
துயர் கண்டும் இடருறும் இவள் என்னீர்.  பொன்னுறு நறுமேனி பொடியாடிக்
கிடப்பதோ' (சிலப்-ஊர்சூழ்.வரி39.40) எனப் புலம்பிய கண்ணகியின் துயரம்
ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. வாலிக்கு ஏற்பட்ட கொடிய நிலையைத்
'தரைமேலாய்' எனும் தொடர்உணர்த்தும்.                         168

4103.'நையா நின்றனென், நான் இருந்து இங்ஙன்;
மெய் வானோர் திரு நாடு மேவினாய்;
ஐயா! நீ எனது ஆவி என்றதும்,
பொய்யோ? பொய் உரையாத புண்ணியா!

     பொய் உரையாத புண்ணியா -பொய்ம்மொழி பேசாப் புண்ணி யனே!
நான் இங்ஙன் இருந்து -
நான் இங்கே இருந்து;நையா நின்றனென் -துயர்
உற்று வருந்தி நின்றேனாக;மெய் வானோர் திருநாடு -(நீயோ) வாய்மையில்
வழாத தேவர்கள் வாழும் விண்ணுலகை;மேவினாய் -அடைந்தாய்;ஐயா -
என் தலைவனே!நீ எனது ஆவி என்றதும் -(நீ என்னை நோக்கி) 'நீயே
எனது உயிர்' என்றதும்;பொய்யோ -பொய்தானா?

     வாலி தாரையை உயிராகக் கருதியது போல், தாரையும் வாலியை
உயிராகக் கருதியதை 'உயிர் போனால் உடலாரும் உய்வரோ? (4100) என்ற
அடிகள் உணர்த்தும்.  வாலியும் தாரையும் வாழ்ந்த வாழ்வின் அன்பு
நிலையை இதனால் அறியலாம்.  குடும்பத் தலைவன், தலைவியருள்
ஒவ்வொருவரும் தம்மை உடலாகவும், மற்றவரை உயிராகவும் அன்பு காட்டி
வாழ்வது இயல்பாகும்.  எனவே தான் இங்குத் தன் உயிர் துடிக்க, உடல்
பிரிதல் இல்லை என்பதால் 'நீ எனது ஆவி என்றதும் பொய்யோ' என்றாள்.
என்றதும் - உயர்வு சிறப்பும்பை.  'நீ எனது ஆவி' எனச் சொன்னது
உண்மையாயின் தன்னை விட்டுப் பிரிந்திருக்கக் கூடாதன்றோ' எனப்
புலம்பினாள் பொய் உரைத்துவிட்டு உண்மை பேசும் தேவர்கள் உலகில்
எங்ஙனம் செல்ல முடிந்தது என்பதற்கு 'மெய் வானோர்' என்றாள்.
பொய்யோ - ஐயவினா.                                       169