| இற்றாய்; நான் உனை என்று காண்கெனோ? |
முந்துறச் சொற்றேன் -(சுக்கிரீவனுடன் போர் செய்ய வருவதற்கு) முன்னதாகவே (இராமன் சுக்கிரீவனுக்குத் துணையாகப் போரிட வந்துள்ளான் என்ற செய்தியை) நான் சொன்னேன். அன்ன சொல் கேளாய் - அந்த வார்த்தையைக் ஏற்றுக் கொள்ளாமல்;அற்றான் -விருப்பு வெறுப்பற்ற இராமன்;அன்னது செய்கலான் -அவ்வாறு முறையற்ற செயலைச் செய்யமாட்டான்;எனா -என்று கூறி;உம்பியை உற்றாய் -உன் தம்பியை (எதிர்த்துப் போரிட) வந்தாய்;ஊழி காணும் நீ -ஊழிக் கால முடிவையும் கண்டு வாழவேண்டிய நீ;இற்றாய் -இறந்துவிட்டாய். நான் உனை என்று காண்கெனோ -இனி நான் உன்னை எப்பொழுது காண்பேனோ? இராமன் துணை பெற்று வந்தான் எனத் தாரை கூறிய மொழிகள் - 3958, 3964ல் காண்க. அன்னது செய்கலான். 3956 முதல் 3965 முடிய உள்ள பாடல்களின் கருத்துக்கள். 'ஊழி காணும் நீ' எனத் தாரை நினைத்தது போல், மண்டோதரியும் 'ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன்' (9943) என எண்ணியதுகாண்க. 173 4108. | 'நீறு ஆம், மேருவும், நீ நெருக்கினால்; மாறு ஓர் வாளி, உன் மார்பை ஈர்வதோ? தேறேன் யான் இது; தேவர் மாயமோ? வேறு ஓர் வாலி கொலாம், விளிந்துளான்? |
நீ நெருக்கினால் -நீ (உன் மார்பொடு பொருந்த) நெருக்கித் தாக்குவாயானால்;மேருவும் நீறு ஆம் -மேருமலையும் பொடியாய் விடும்; ஓர் வாளி -(அங்ஙனமிருக்க) ஓர் அம்பு; மாறு -உனக்கு எதிராக;உன் மார்பை ஈர்வதோ -உன்னுடைய மார்பைப் பிளந்து விடுவதா?யான் இது தேறேன் -நான் இதனை உண்மையெனத் தெளிய மாட்டேன். தேவர் மாயமோ -இது தேவர்கள் செய்த மாயச் செயலோ?விளிந்துளான் - (அல்லது) இங்கே இறந்து கிடப்பவன்;வேறு ஓர் வாலி கொலாம் -(நீயன்றி) வேறொரு வாலி தானோ? மேருமலையினையும் பொடியாக்க வல்ல வாலியின் மார்பின் வலிமையை நன்கு அறிந்த தாரை, தன் கணவன் அம்பு பட்டு இறந்து கிடப்பதை நேரில் கண்டும் நம்புதற்கு இயலாதவளாய் 'இது தேவர் செய்த மாயமோ? அல்லது இறந்து கிடப்பவன் தன் கணவன் அல்லாத மற்றொரு வாலியோ என ஐயுற்றுக் கலங்கினாள். 174 4109. | 'தகை நேர் வண் புகழ் நின்று, தம்பியார், பகை நேர்வார் உளர் ஆன பண்பினால், உக நேர் சிந்தி உலந்து அழிந்தவால்; மகனே! கண்டிலையோ, நம் வாழ்வு எலாம்? |
|