மகனே - (தாரை, அங்கதனை முன்னிலைப்படுத்தி) மைந்தனே! தம்பியார் -(உன் தந்தைக்குத்) தம்பியரான சுக்கிரீவர்;தகைநேர் -பெருமை பொருந்திய;வண் புகழ் நின்று -(உன் தந்தையின்) சிறந்த புகழுக்கேற்பப் பணிந்து நின்று;பகை நேர்வார் உளர் ஆன பண்பினால் -(பின்பு உறவு நிலைமாறி) அவரோடு பகைமை கொள்பவர் தன்மையினால்;உக -உன் தந்தை இறந்துபடி;நம் வாழ்வு எலாம் -நமது சிறப்பான வாழ்க்கையெல்லாம்;நேர் சிந்தி உலந்து அழிந்த -தகுதி கெட்டு அழிந்துவிட்டன. கண்டிலையோ -இதனை நீ காண வில்லையோ? இஃது அங்கதன் அவ்விடத்து இல்லாவிடினும் அவனை முன்னிலை யாக்கித் தாரை புலம்பியது. தம்பியார் - பன்மை விகுதியில் கூறியது வெறுப்பினால் என்க. வஞ்சப் புகழ்ச்சி. வண்புகழ் நின்று என்பதற்கு (தமையனின்) புகழின் ஒளியிலே நிலைத்து வளர்ந்து எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும். அழிந்த; பன்மை வினை முற்று. ஆல் - அசை. அழிந்தவால் என்பது பாடமாற்றம். 175 4110. | 'அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார், ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்; தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம், கருமம் கட்டளை என்றல் கட்டதோ?' |
அருமைந்து -பெறுதற்கரிய வன்மையால்;அற்றம் அகற்றும் - (தன்னையடைந்தவர்களின்) பெருந்துன்பத்தைப் போக்கும்;வில்லியார் - வில்லினையுடைய இராமர்;ஒரு மைந்தற்கும் -எந்த வீரனுக்கும்;அடாதது உன்னினார் -பொருந்தாத முறையற்ற செயலை, நினைத்துச் செய்துவிட்டார். தருமம் பற்றிய -அறநெறியைக் கடைப்பிடித்தொழுகும்;தக்கவர்க்கு எலாம் -தகுதியுடைய பெரியவர்களுக்கெல்லாம்;கருமம் கட்டளை என்றல் - அவரவர் செய்யும் செயல்களே அவரவர் தகுதியை அளக்கும் உரைகல்லாகும் என்று கூறும் ஆன்றோர் உரை;கட்டு அதோ -(உண்மையோடு பொருந்தாத) புனைந்துரைதானா? வாலியின் உயிரைப் போக்கியது வில்லிலிருந்து தொடுக்கப்பட்ட அம்பு ஆதலின் 'வில்லியார்' எனச் சுட்டினாள். இராமன் பெயர் கூறாது வில்லினை உடையவர் என்று இழிவு தோன்றக் கூறினாள் என்க. அற்றம் அகற்றும் வில் உண்மையில் அற்றம் போக்காது துன்பத்தையே விளைத்தது என்பது குறிப்பு. கருமம் கட்டளையாவதைப் ''பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம், கருமமே கட்டளைக் கல்'' எனக்குறள் (505) உணர்த்துதல் காண்க. கட்டளை- உரைகல்; பொன்னை உரைத்துப் பார்க்கும் கல். கட்டதோ - ஓகாரம் வினா. 176 மாருதி வாலியின் இறுதிக் கடன் செய்வித்தல் 4111. | என்றாள், இன்னன பன்னி, இன்னலோடு ஒன்று ஆனாள்; உணர்வு ஏதும் உற்றிலாள்; |
|