பக்கம் எண் :

அரசியற் படலம் 299

கரத்தில் நீக்கினான் -தனது சிவந்த கதிர்களாகிய கைகளினால் திறந்து
விட்டான்.

     இரவு கழியக் கதிரவன் இயற்கையாக உதயமாவதை அன்று தன் மகன்
மணிமுடி சூட இருப்பதால் முற்பட்டு வந்ததாகவும். தாமரை இயல்பாக இதழ்
விரித்தலை, இரவில் குவிந்திருந்த தாமரை மலருக்குள் இருந்த திருமகள் முடி
சூடும் கதிரவன் மகனைச் சேர்தற் பொருட்டு அவள் இருந்த தாமரை மலர்
வீட்டின் இதழ்க் கதவுகளைத் தன் சுரங்களால் திறந்துவிட்டதாகவும் கூறியதால்
இப்பாடல் தற்குறிப்பேற்ற அணி பொருந்தியது.  பொழுது புலரும்போது
தாமரை விரிந்தது என்ற எளிய செய்தி கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பரின்
எழுத்தாணியில் அரிய கற்பனையாகப் புனையா ஓவியமாகத் தீட்டியுள்ள நயம்
உணர்க.                                                        1

4116.அது காலத்தில், அருட்கு நாயகன்,
மதி சால் தம்பியை வல்லை ஏவினான் -
'கதிரோன் மைந்தனை, ஐய! கைகளால்,
விதியால் மௌலி மிலைச்சுவாய்' எனா.

     அது காலத்தில் -அப்பொழுது;அருட்கு நாயகன் -கருணைக்குத்
தலைவனான இராமன்;மதி சால் தம்பியை -அறிவு நிறைந்த தன் தம்பி
இலக்குவனை (நோக்கி);ஐய -ஐயனே!கதிரோன் மைந்தனை -சூரியன்
புதல்வனான சுக்கிரீவனுக்கும்;கைகளால் -உன் கரங்களால்;விதியால்
மௌலி மிலைச்சுவாய் -
முறைப்படி முடி சூட்டுவாய்;எனா -என்று;
வல்லை ஏவினான் -
விரைந்து கட்டளையிட்டான்.

     அருட்கு நாயகன் - இராமன் கருணை நிறைந்தவன் என்பதைக்
'கருணையின் கடல் அணையர்' (3758) 'கருணை ஆம் அமிழ்தம் காலும்'
(6497), 'கருணை வள்ளல்' (6501) என்ற இடங்களில் காண்க.  மௌலி -
வடசொல்.  நல்ல காரியங்களை உடனே செய்துவிடல் நல்லது ஆதலின்
'வல்லை ஏவினான்' என்றார். விதி - முடிசூட்டுவதற்கு நூல்கள் கூறும்
முறைகள்.  பதினான்கு ஆண்டுகள் தன் தந்தையின் சொல்லைக் காக்க
விரதம்மேற்கொண்டிருப்பதால் இராமன் நகருட் செல்ல இயலாது ஆதலின்,
இலக்குவனையே மணிமுடி சூட்டுமாறு இராமன் கட்டளையிட்டான்.  பின்
வீடணனுக்கும் இவ்வாறே செய்விப்பதும் காண்க.

     வாலியின் ஈமக்கடன்கள் முடிந்தபிறகு அனுமன் இராமனைக்
கிட்கிந்தைக்கு வந்து சுக்கிரீவனுக்கு முடி சூட்டுமாறு வேண்ட, இராமன்
மறுத்து அனுமனையே, பிற வானரத் தலைவர்களுடன் அவ்விழாவை
நிறைவேற்றப் பணித்துச் சுக்கிரீவன் முடிசூட்டிக் கொள்ளவும், அங்கதன்
இளவரசுப்பட்டம் சூட்டிக் கொள்ளவும் சொன்னான் என்பது வான்மீகம்.
இலக்குவனை ஏவினதாக அந்நூலில் இல்லை.  அத்யாத்ம ராமாயணமும்,
துளசீதாசர் இராமாயணமும் இலக்குவனைக் கொண்டு முடி சூட்டப்
பெற்றதாகக்கூறும்.                                            2

4117. அப்போதே, அருள் நின்ற அண்ணலும்,
மெய்ப் போர் மாருதிதன்னை, 'வீர! நீ,