ஆகி -மலர்ச்சி பெற்ற முகமுடையனாகிய;நாவால் இன் உரை நல்கு - நாவினால் இனிமையான சொற்களைச் சொல்வாயாக. மூவகைப் பிரமாணங்களுள் காட்சியை விடுத்து ஏனை அனுமானப் பிரமாணமும் ஆகமப் பிரமாணமும் ஈண்டுக் கூறப்பட்டன. காட்சிப் பிரமாணம் வெளிப்படை யாதலின் கூறவில்லை. இவை உண்மை காணத் துணை செய்வன. மிகை - கண்ணால் கண்டதற்கு மேல், சிறப்பறிவால் ஊகித்தும் அறிவதால் 'மிகை' எனப்பட்டது. நல்லவர்க்கு நல்லவர்களாகவும், அல்லாதார்க்கு அவர்களை ஒடுக்க வேண்டியிருத்தலின் நல்லவர் போன்றவர்களாய் இருக்க வேண்டுமாதலின் 'நூலோர் வினையமும்' எனக் குறித்தான். பகைவரிடமும் இன்முகமும் இன்சொல்லும் கொள்க என்றான். 'மிகச் செய்து தம் எள்ளுவாரை நகச் செய்து, நட்பினுள் சாப்புல்லல் பாற்று', 'பகை நட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகநட்பு ஓரீஇ விடல்' (குறள். 829, 830) 'பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து உள் வேர்ப்பர் ஒள்ளியவர். (குறள் 487) என்பன ஒப்புநேநக்கத்தக்கன. பகையுடைச் சிந்தையார்க்கும் என்ற உம்மையால் யாவரிடமும் இன்முகமும் இன்னுரையும் வேண்டும் என்பது பெறப்பட்டது. பண்பு - எல்லோர் இயல்புகளும் அறிந்து நடத்தல். 'பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்' (கலி. 143 - 8) என்ற கலித்தொகையைக் காண்க. அரசியல் அரங்கில் சூழ்ச்சி வழி பேணுதல் என்றும் உண்டு போலும். அறத்தின் நாயகனாகிய இராமனே பேசுகிறான் என்பதை எண்ண வேண்டியுள்ளது. பகையுறு சிந்தையாரிடமும் பண்போடு நடக்கச் சொல்லும் பெருமானே நூலோர் வினையம் பேணச் சொல்கிறான்! 9 4124. | 'தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர் அறு செல்வம்அஃது உன் காவலுக்கு உரியதுஎன்றால், அன்னது கருதிக் காண்டி; ஏவரும் இனிய நண்பர், அயலவர், விரவார், என்று இம் மூவகை இயலோர் ஆவர், முனைவர்க்கும் உலக முன்னே. |
தேவரும் வெஃகற்கு ஒத்த-தேவர்களும் விரும்பத்தக்க; செயிர் அறு செல்வம் -குற்றமற அரிய செல்வமாய;அஃது -அது;உன் காவலுக்கு உரியது -உனது பாதுகாவலில் அமைந்திருக்கிறது;என்றால் -என்றால்; அன்னது கருதி -அச்செல்வத்தின் அருமையை மனத்தில் எண்ணி;காண்டி- அதைக் காப்பதில் கருத்தாய் இருப்பாய். உலகம் முன்னே -உலகத்தின் முன்னிலையில்;முனைவர்க்கும் -முனிவர்களுக்கும்;ஏவரும் - எத்ததகயவராயினும்;இனிய நண்பர் - இனிய நண்பர்கள்;விரவார், அயலவர் -பகைவர்கள், இருவருமல்லா நொது மலர்;என்று இம்மூவகை இயலோர் ஆவர் -என்று மூன்று வகைப்பட்ட தன்மையுடையோராவர். பற்று நீங்கிய முனிவர்க்கும், உலகில் உள்ளோர் யாவரும் நண்பர், பகைவர், நொதுமலர் என்ற வகையில் அடங்குவர் எனின், பொருளில் திளைக்கும் சுக்கிரீவன்மாட்டுக் கூற வேண்டுவதில்லை என்றவாறு. அதனால் அரசன் நட்பு, பகைமை, நொதுமல் என்ற வேற்றுமை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும். |