சபைகள் பொருந்திய தேவர் உலகத்துக்கே;அரசு எனல் ஆகும் அன்றே -தலைமை கொண்டு மேம்பட்டதென்று கூறத்தக்க தல்லவா? நீ - (அதனால்) நீ;மனத்தின் எம்மை இரங்கிய பணி -உன் மனத்தில் எங்கள் பால் இரக்கங் கொண்டு கட்டளையிடும் வேலைகளை;யாம் செய்ய - நாங்கள் செய்ய;சில நாள் எம்பால் இருத்தி -சில நாட்கள் எம்முடன் இருப்பாயாக. அரங்கு - சுதர்மை முதலிய தெய்வ சபைகள். நில, நீர்வளம் பெற்று வாழ்வதற்கு உரிய வசதிகள் கொண்ட இடமாதலின் 'மரம்கிளர் அருவிக் குன்றம்' எனப்பட்டது. வள்ளல் - அண்மை விளி; இழந்த மனைவியையும் அரசினையும் தனக்கு அளித்தது கருதிக் கூறியது. கிட்கிந்தையைக் குரங்குகள் வாழும் இடம் என ஒரு குறை கூறலாமேயன்றி அது சுவர்க்கத்தினும் மேம்பட்டது என்பதால் இராமனை அவ்விடம் தங்குமாறு சுக்கிரீவன் வேண்டினான் என்க. 18 4133. | 'அரிந்தம! நின்னை அண்மி, அருளுக்கும் உரியேம் ஆகி, பிரிந்து, வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால்; கருந் தடங் கண்ணினாளை நாடல் ஆம் காலம்காறும் இருந்து, அருள் தருதி, எம்மோடு' என்று, அடி இணையின் வீழ்ந்தான். |
அரிந்தம -பகைவர்களை அழிப்பவனே! நின்னை அண்மி - (நாங்கள்) உன்னைப் புகலடைந்து;அருளுக்கும் உரியேம் ஆகி -(உனது) கருணைக்கும் உரியவர்களாயிருந்து;பிரிந்து -(பின்) உன்னை விட்டுப் பிரிந்து;வேறு எய்தும் செல்வம் -தனியே அனுபவிக்கின்ற செல்வம்; வெறுமையின் பிறிது அன்று ஆம் -வறுமையினும் வேறான தன்று; கருந்தடங் கண்ணினாளை -(ஆதலால்) கரிய பெரிய கண்களை உடைய பிராட்டியை;நாடல் ஆம் காலம் காறும் -தேடுதற்கு ஏற்ற காலம் வருமளவும்;எம்மோடு இருந்து அருள் தருதி -(கிட்கிந்தையில்) எங்களோடு இருந்து அருள்புரிவாய்;என்று -என்று கூறி;அடி இணையின் வீழ்ந்தான்- இராமனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். வாலியைக் கொன்ற திறம் பற்றி 'அரிந்தம' என அழைத்தான். இராமனைச் சேர்ந்து பெறும் இன்பத்தை நோக்க, தனியே வேறாகப் பெறும் செல்வம் பெற்றும் பெறாதது போலாகும் என்றான். 19 4134. | ஏந்தலும், இதனைக் கேளா, இன் இள முறுவல் நாற, 'வேந்து அமை இருக்கை, எம்போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா; |
|