பார்த்திலை போலும் -(நீ இதனை) எண்ணிப் பார்த்தாய் இல்லை போலும்! வாலி இறந்தபிறகு, கிட்கிந்தைக்கு வந்து சுக்கிரீவனுக்கு முடிசூட்ட வேண்டும் என வேண்டியவன் அனுமன் என்கிறது வான்மீகம்; சுக்கிரீவன் அழைப்பதாக அங்குச் செய்தி இல்லை. தந்தை கட்டளையின்படி பதினான்கு ஆண்டுகள் காட்டில் உறைதல் வேண்டும், நகரினுள்ளாவது ஊரினுள்ளாவது புகுதல் தகாது எனக் கூறி சுக்கிரீவன் வேண்டுகோளை மறுக்கிறான், இராமன். எரிவனம் - வெயிலின் கடுமையால் தீப்போல் சுடுகின்ற காடு. சீதையின் சொல்லுக்கு யாழ் உவமை. 'குறி நரம்பு எறிவுற்று எழுவு தண் தமிழ் யாழினும், இனிய சொல் கிளியே' (2073); 'குழலும் யாழும், கொழும்பாகும் அயிலும் அமுதும் சுவை தீர்த்த மொழி' (3569) என்பன காண்க. இராமனுக்குச் சீதையோடன்றித் தனியே எய்தும் இன்பம் இன்பமாகாது. அன்று ஏ - அசை நிலைகள். 21 4136. | '' தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப, தான் தன் ஆவிபோல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம் மேவினான், இராமன்'' என்றால், ஐயா! இவ் வெய்ய மாற்றம், மூவகை உலகம் முற்றும் காலத்தும், முற்ற வற்றோ? |
தேவி -என் தேவியான சீதை;வேறு -தனியாய்;அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப -இராவணன் கொண்டுபோய் வைத்த காவலில் இருக்க; தான் தன் -தான், தன்னுடைய;ஆவிபோல் துணைவரோடும் -உயிர் போன்ற நண்பர்களோடு;அளவிடற்கு அரிய இன்பம் -அளவிடமுடியாத அரிய இன்பத்தை;இராமன் மேவினான்-இராமன் விரும்பினான்;என்றால்- என்று மக்கள் கூற நேர்ந்தால்;ஐய -ஐயனே!இவ்வெய்ய மாற்றம் - இந்தக் கொடிய சொல்;மூவகை உலகம் -(மேல், கீழ், நடு எனும்) மூன்று வகைப்பட்ட உலகங்களும்;முற்றும் காலத்தும்- அழியுங் காலத்திலும்; முற்றவற்றோ -முடிய வல்லதாகுமோ? (அந்தப் பெரும்பழி உலகங்கள் அழிந்தாலும் அழியாது). உலகம் முற்றும் காலம் - ஊழிக்கால முடிவு. அரக்கனது சிறைக் காவலில் இருக்க. இராமன் தன் நண்பர்களோடு இன்பங்களை விழைந்தான் என்று உலகம் கூறும் பழிச்சொற்கு இராமன் அஞ்சினான் என்க. மேவுதல் - விரும்புதல். 22 4137. | 'இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும், போரின் வில் அறம் துறந்தும், வாழ்வேற்கு, இன்னன மேன்மை இல்லாச் |
|