வேசையர் -விலைமகளிரது;உலைவுறும் மனம் என -நிலையின்றிச் சுழலும் மனம் போல;உலாய -வீசியது. விலை மகளிர், பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மேலோர் கீழோர் என்னும் வேறுபாடு கருதாது பொருள் கொடுப்பாரிடம் தம்மைக் கொடுப்பவராவர். இவர்கள் பொருட் பெண்டிர், வரைவி்ல் மகளிர் எனவும் குறிக்கப்படுவர். ''மெய்வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும் பை அரவு அல்குவார் தம் உள்ளமும்'' (495); ''நிலையா மன வஞ்சனை நேயம் இலா விலை மாதர்'' (3280), 'நிதி வழி நேயம் நீட்டும் மன்றலம் கோதை மாதர் மனம்' (3309) என்று முன்னரும் விலைமகளிர் இயல்பு கூறப்பட்டது. விலங்குதல் - விலகிச்செல்லுதல். 12 4160. | அழுங்குறு மகளிர், தம் அன்பர்த் தீர்ந்தவர், புழுங்குறு புணர் முலை கொதிப்பப் புக்க உலாய், கொழுங் குறைத் தசை என ஈர்ந்து கொண்டு, அது விழுங்குறு பேய் என, வாடை வீங்கிற்றே. |
வாடை -வாடைக் காற்று;தம் அன்பர் தீர்ந்தவர்-தன் அன்புமிக்க தலைவரைப் பிரிந்தவர்களாய்;அழுங்குறு மகளிர் -வருந்துகின்ற பெண்களின்;புழுங்குறு புணர் முலை -(மனவேதனையினால்) வெதும்புகின்ற நெருங்கிய கொங்கைகள்;கொதிப்பப் புக்கு உலாய் -மேலும் கொதிப்பு அடையுமாறு அவற்றின் மீது சென்று வீசி;கொழுங் குறைத் தசை என - (அக்கொங்கையைச்) செழுமையான மாமிசத் துண்டம் என நினைத்து;ஈர்ந்து கொண்டு -அரிந்தெடுத்துக் கொண்டு;அது விழுங்குறு -அத்தசையை விழுங்க வந்த;பேய் என -பேய் போல;வீங்கிற்று -ஓங்கி வளர்ந்து வீசியது. கணவரைப் பிரிந்த மகளிரின் கொங்கைகள் மிகக் கொதிக்குமாறு வீசி, அவற்றை மாமிசத்துண்டமென நினைத்து உண்ணவரும் பேய் போல் வாடைக் காற்று வீசியது என அதன் கடுமை கூறப்பட்டது. வடக்கிலிருந்து வீசுவதால் வாடை எனப்பட்டது. பிரிந்துறை மகளிரை வாடை வருத்தும் என்பதை ''தழல் வீசி உலா வரு வாடை தழீஇ அழல்வீர்'' (5232), 'பனிப்பியல்வாக வுடைய தண்வாடை யிக்காலம் இவ்வூர்ப் பனிப்பியல்வெல் லாந் தவிர்ந்தெரி வீசும்' (திருவிருத்தம் 5) என்ற அடிகள் உணர்த்தும். பேய், பிறர் அஞ்சத்தக்க பெரிய வடிவம் கொண்டாற்போல, வாடையும் விஞ்சியது எனக் கூறவேண்டி, வாடை வீசிற்று என்னாது 'வீங்கிற்று' என்றார். அன்பர்த் தீர்ந்தவர் - இரண்டாம் வேற்றுமைத் தொகை; தசை - இலக்கணப் போலி. 13 |