போல் உள்ளது என்பதால் இப்பாடல் உருவகத்தை அங்கமாகக் கொண்டு வந்த உவமை அணியாகும். மன்மதன் மீன் எழுதிய கொடி உடையவனாதலி்ன் 'மீனிடு கொடியவன' எனக் காரணப் பெயரால் குறித்தார். வானிடு தனு இந்திர வில், திருவில் என்றும் வழங்கப்பெறும். 'திருவில் அல்லது கொலை வில் அறியார்' (புறநா - 20) என்றது காண்க. பிரிவால் உயிர்போய் ஊன் மட்டுமே உள்ள உடம்பு என்னும் பொருள் தோன்ற 'ஊன் உடை உடம்பு' எனப்பட்டது. சார் - சாரல்; விகாரம்; இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் தொடரும் உழுவலன்புடையவர் ஆதலின் 'நெடுஞ்சார் துணை' என்றார். 'பிறப்பால் அடுப்பினும் பின்னும் துன்னத்தகும் பெற்றியரே' (திருக்கோவை 205); ''இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகிய நின் நெஞ்சு நேர்பவளே'' (குறுந். 49) என்பனகாண்க. 18 | 4166. | 'தீர்த்தனும் கவிகளும் செறிந்து, நம் பகை பேர்த்தனர் இனி' எனப் பேசி, வானவர் ஆர்த்தென, ஆர்த்தன மேகம்; ஆய் மலர் தூர்த்தன ஒத்தன, துள்ளி வெள்ளமே. |
தீர்த்தனும் கவிகளும் -''தூயவனான இராமனும் வானரங்களும்; செறிந்து -ஒன்று கூடியதால்; இனி நம் பகை பேர்த்தனர் -இனி நமது பகைவராயுள்ள இராவணன் முதலியோர் அழிந்தவராவர்;எனப் பேசி - என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு;வானவர் ஆர்த்தென -தேவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரித்தது போல; மேகம் ஆர்த்தன -மேகங்கள் ஆரவாரித்தன;துள்ளி வெள்ளம் -(மேகம் சொரிந்த) மழைத் துளிகளின் தொகுதிகள்;ஆய்மலர் தூர்த்தன ஒத்தன -(அங்ஙனம் மகிழ்ந்த தேவர்கள்) ஆய்ந்தெடுத்த கற்பகம் போன்ற மலர்களை (அவ்விராமன் மீதும் குரங்குகளின் மீதும்) சொரிந்து நிரப்பினால் போன்றன. மேகங்களின் முழக்கம், இராமனும் வானரர்களும் சேர்ந்ததால் பகைவர்கள் அழிந்தனர் என்ற மகிழ்ச்சியால் தேவர்கள் செய்த ஆரவாரம் போலவும் மழைத்துளிகள் தேவர்கள் பெய்த மலர்கள் போலவும் விளங்கின; தற்குறிப்பேற்ற அணி. 'தீர்த்தனும் கவிகளும் பேர்த்தனர்' - உயர்திணையும் அஃறிணையும் விரவிச், சிறப்பினால் உயர்திணை முடிபைப் பெற்றது; திணைவழுவமைதி. பேர்த்தனர் - தெளிவும் விரைவும் பற்றிய கால வழுவமைதி. துள்ளி - துளி என்பதன் விரித்தல் விகாரம். ''துள்ளி தரு வெள்ளம்'' (4997) 'துள்ளி வெள்ளி இனம்' (5280) என்பன காண்க. இராமனைத் 'தீர்த்தன்' (3060) என முன்னரும் கூறினார். இராமலக்குவர் செயல்களைக் கண்டு வானவர் மகிழ்ச்சியால் ஆரவாரிப்பதை நூலின் பல இடங்களில் காணலாம். ''தூர்த்து அமைந்தனர் வானவர் தூய்மலர் (3060), 'பூ மழை அமரர் சிந்த' (9167) 'தூர்க்கின்ற மலர் மாரி தொடரப் போய்'' (9900) என்பன காண்க. ஆர்த்தால் என என்பது ஆர்த்து என நின்றது. இராமனின் அவதாரம் இராவணன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்கே என்பதை இப்பாடல் உணர்த்தும். 19 | 4167. | வண்ண வில் கரதலத்து அரக்கன், வாளினன், |
|