வரும்பொழுது;பிறக்கும் ஓசை -உண்டாகின்ற ஓசையும்;ஊடுறத் தாக்கும் தோறும் -(அவை) ஒன்றையொன்று மோதும் பொழுதெல்லாம்; பிறப்ப ஒல் ஒலி -பிறப்பனவாகிய ஒல் எனும் ஓசையும்;நல்லார் ஆடு இயல் -அம்மலையில் நாடகமகளிர் ஆடு்ம் கூத்தின் இயல்பிற்கேற்ற; பாணிக்கு ஒக்கும் -கைத்தாளத்தை ஒத்திருக்கும்;மலர்ந்த கூதாளம் - மலர்ந்த கூதள மலர்கள்;ஆரிய அமிழ்தப் பாடல் -(அவர்கள் பாடிய) சிறந்த அமுதம் போன்ற பாடல்களுக்கு ஏற்ப;கோடியர் தாளம் கொட்டல் ஒத்த -நட்டுவர் தாளம் கொட்டுவதை ஒத்தன. மிஞிறு - ஞிமிறு - இலக்கணப்போலி; முன்னே பேடை என்றதால் 'மிஞிறு' ஆண் வண்டாயிற்று. முன் செய்யுளில் மயில்கள் ஆடும் நாடக அரங்கைக் காட்டியவர், இப்பாடலில் அவ்வரங்கில் நிகழும் கூத்திற்கேற்ப வண்டுகள் எழுப்பும் ஓசை தாளமாகவும், மலர்ந்த கூதளமலர்கள் தாளம் கொட்டுவதை ஒத்தும் விளங்குவதைக் காட்டுகிறார். இப்பாடல் தற்குறிப்பேற்ற அணி. கூதாளச் செடிகளின் மலர் வடிவம் தாளம் போலிருக்கும் கூதாளி - கூதளம், தாளி, நறுந்தாளி எனவும்படும். 33 காட்டாறும் கொன்றையும் | 4181. | வழை துறு கான யாறு, மா நிலக் கிழத்தி, மக்கட்கு உழை துறு மலை மார்க் கொங்கை சுரந்த பால் ஒழுக்கை ஒத்த; விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டி, குழைதொறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த, கொன்றை. |
வழை துறு -சுரபுன்னை மரங்கள் அடர்ந்த; 'கானயாறு -காடுகளில் பெருகிய நதிகள்;மாநிலக் கிழத்தி -நிலமகள்;மக்கட்கு -தன் மக்கள் பொருட்டு;உழை துறு மலை மாக் கொங்கை -புடை பருத்த மலைகளாகிய தன் பெரிய மார்பகத்திலிருந்து;சுரந்த பால் ஒழுக்கை ஒத்த - (அன்பினால்) சுரந்து பெருகவிட்ட பாலின் தாரைகளைப் போன்று இருந்தன; கொன்றை -(பொன் போன்ற மலர்கள் பூக்கும்) கொன்றை மரங்கள்; விழைவுறு வேட்கையோடும் -(பொருட்களை) விரும்பும் ஆசையால்; வேண்டினர்க்கு உதவ வேண்டி -வேண்டியவர்களுக்குக் கொடுக்க வேண்டி; குழைதொறும் கனகம் தூங்கும் -தளிர்கள்தோறும் பொன்னைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும்;கற்பகம் நிகர்த்த -கற்பக மரங்களை ஒத்தன. நிலமகளுக்கு மலைகளைக் கொங்கைகளாகக் கூறும் இலக்கிய மரபு உண்டு. 'பணைத்தோள் மாநில மடந்தை அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல' (சிறுபாண். 1 - 2); |