பக்கம் எண் :

அனுமப் படலம்35

     சுக்கிரீவன் வாழும் ருசியமுகம் என்னும் மலைக்குப் போகும்
வழியெல்லாம் நினைந்து சொல்லி ஏவியவள் சபரி.  அதனால் 'சவரி
நெடிதுஏய மால்வரை' என்றார்.  'வினையறு நோன்பினாளும் மெய்ம்மையின்
நோக்கி வெய்ய, துனைபரித் தேரோன் மைந்தன் இருந்தஅத் துளக்கில்
குன்றம், நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள்'
(3704) என்பதைக் காண்க.  கடத்தற்கரிய மலையை இராமலக்குவர் தம்
ஆற்றலால் எளிதில் கடந்தனர்.  கவந்தனும் சபரியும் புகழ்ந்து பேசிய
சுக்கிரீவனைக் காணும் ஆர்வத்தால் விரைந்து ஏறினர் என்பதால் 'நொய்தின்
ஏறினர்' என்றார். சுக்கிரீவன் அரசனாகும் நிலை பெறுவான் ஆதலின்
'கவியரசு' எனப்பட்டான்.                                         1

3752.'காலின் மா மதலை! இவர்
     காண்மினோ; கறுவு உடைய
வாலி ஏவலின் வரவினார்கள்
     தாம்; வரி சிலையர்;
நீல மால் வரை அனையர்;
     நீதியா நினைதி' என,
மூலம் ஓர்கிலர் மறுகி
     ஓடினார், முழைஅதனின்.

     மூலம் ஓர்கிலர் -இராமலக்குவர் வரும் காரணத்தை உணராத
வானரர்கள்;காலின் மாமதலை-காற்றின் புதல்வனாகிய அனுமனே! இவர்-
இவர்கள்;கறுவு உடைய வாலி- நம்மிடம் பகைமை கொண்ட வாலியின்;
ஏவலின் வரவினார்கள் -
ஏவலால் நம்மை வருத்த வருகின்றவர்களாவர்;
வரிசிலையர் -
கட்டமைந்த வில்லையுடையராய் உள்ளனர்;நீலமால்வரை
அனையர் -
நீலநிறமுடைய மலை போன்ற தோற்றத்தை உடையவர்கள்;
காண்மின் -
(இவர்களைக்) காண்பாய்;நீதியா நினைதி என -முறையாக
இவர்களை ஆராய்வாயாக என்று கூறிவிட்டு;மறுகி -மனங்கலங்கி;முழை
அதனின் ஓடினார்
- மலைக்குகைக்குள்ளே ஓடினார்கள்.

     முன் பாடலில் சுக்கிரீவன் ஓடியதைக் கூறியவர் இப்பாடலில் அவனது
அமைச்சர் முதலாயினோர் ஓடியதைக் கூறுகின்றார்.  அமைச்சர்களில்
நுண்ணறிவும் சூழ்ச்சியும் மிக்கோன் அனுமன் ஆதலின் அவனையே
வந்திருப்போரை ஆராயுமாறு பணித்தனர்.  சாபத்தால் வாலி ருசியமுகம்
என்னும் மலைக்கு வராது தனக்குப் பதிலாக வீரர்களை ஏவியிருக்கலாம் எனக்
கருதியதால் 'கறுவுடைய வாலி ஏவலின் வரவினார்கள்' என்றார்.  நீலமால்
வரை இராமன் மேனிக்கு ஏற்ற உவமையயகிறது. இலக்குவனுக்குக் கூறுங்கால்,
இராமனின் திருமேளி ஒளி இளையவன்மீது படுதலால், பொன்னொளி அடங்கி
நீல ஒளியுடையதாகக் காணப்பட்டதாகப் பொருந்திக் கொள்ளலாம்.
சுக்கிரீவன் சென்ற குகையினுள்ளே அமைச்சர்களும் சென்றனர் என்பது
தோன்ற 'முழை அதனின்' எனப்பட்டது.

     காலின் மாமதலை - அனுமன்; வாயுவின் அருளால் அஞ்சனா
தேவியிடத்தில் பிறந்தவன். இதனை அவனே சொல்கின்றான் (3765). வாலி
என்பதற்கு வாலில் வலியுள்ளவன் என்பதும், வாலினின்று பிறந்தவன்
என்பதும்பொருள்.