காதலின் மயங்கி -(கார்காலம் வந்த அளவில்) மயக்கத்தைத் தரும் காதலோடு மயங்கி;கூடு நல் நதித்தடம் தொறும் -(தாம்) வந்து சேரப்பெற்ற சிறந்த நதிகளின் இடம்தோறும்;குடைந்தன -துளைந்து;படிவுற்று ஆடுகின்றன -நீராடி விளையாடுகின்றனவான;அன்னம் -அன்னப் பறவைகள்;கொழுநரைப் பொருவின -(தலைவியரைச் சேர்ந்த) கணவரைப் போன்றன. கோடை காலத்தில் நீர் வற்றியதால் நீர்நிலைகளைப் பிரிந்து சென்றிருந்தது, கார் காலத்தில் அவற்றில் நீர் நிறைந்தமை உணர்ந்து வந்து அவற்றில் படிந்து குடைந்து ஆடும் அன்னங்கள், பல நாட்கள் பிரிந்து சென்றிருந்தது, கார் காலம் வந்த அளவில் திரும்பி வந்து காதலால் தலைவியரைத் தழுவி மகிழும் தலைவரைப் போன்றன. உவமை அணி. நீடு பிரிந்திருந்து வாடுதலும், கார்காலம் வந்தவுடன் மகிழ்ந்தாடுதலும் அன்னங்களுக்கும் தலைவர்க்கும் ஒத்தலின் 'கொழுநரைப் பொருவின அன்னம்' என்றார். 40 | 4188. | கார் எனும் பெயர்க் கரியவன் மார்பினில் கதிர்முத்து - ஆரம் என்னவும் பொலிந்தன - அளப்ப அரும் அளக்கர் நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து கூரும் வெண்நிறத் திரை எனப் பறப்பன குரண்டம். |
அளப்ப அரும் -அளத்தற்கரிய;அளக்கர் -கடலிலிருந்து;நீர் முகந்த மாமேகத்தின் -நீரைக் கவர்ந்து செல்கின்ற கரிய மேகத்தின்;அருகு உற நிரைத்து -அருகில் பொருந்துமாறு வரிசைப்பட்டு;கூரும் வெண் நிறத்திரை என -மிகுதியான வெண்மை நிறத்தை உடைய அலைகள் போல; பறப்பன குரண்டம் -பறப்பனவாகிய கொக்குகள்;கார் எனும் பெயர்க்கரியவன் -நீலமேகன் என்னும் பெயரை உடைய கரியவனான திருமாலின்;மார்பில் கதிர்முத்து ஆரம் - மார்பில் அணிந்த ஒளி பொருந்திய முத்துக்களாலான ஆரம்;என்னவும் -போலவும்;பொலிந்தன - விளங்கின. கார் - நீலமேகம். அதன் பெயர் கொண்டவன் நீலமேகன். காளமேகம் என்னும் பெயர் கொண்ட திருமால் எனவும் கொள்ளலாம். பாண்டிய நாட்டிலுள்ள திருமோகூர்த் தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் பெயர் காளமேகப் பெருமாள் என்பதாம். மாமேகம் - கரிய மேகம், கடல் நீரை முகந்தமையால் கரிதாகிய மேகம்; கருமேகத்தின் அருகில் வெண்ணிறத்திரை போலப் பறக்கும் கொக்குகளின் தோற்றம் திருமால் மார்பில் அணியும் முத்தாரம் எனப் பொலிந்தது என்றது நிறமும் தோற்றமும் பற்றி வந்த உவமை அணியாகும். 'நெடு வேல் மார்பின் ஆரம்போலச் செவ்வாய் வானம் தீண்டி மீனருந்தும், பைங்கால் கொக்கின் நிரைபறையுகப்ப' (அகம் -120) என்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. மேகம் நீர் முகத்தலைக் 'குணகடல் முகந்த வானம்' (அகம் - 278); 'பாடிமிழ் |