பகைவர்கள் பலரைக் கொன்றதனால் கறைபட்ட குருதியின் மிகுதி காட்ட 'செஞ் செவ் வேலவர்' என இரண்டடை கொடுத்தார். மகளிரின் ஊடல் தீர்க்க, ஆடவர் அம்மகளிரின் கால்களில் பணிதலும், பணிந்த தலைவர்களின் தலையில் அம்மகளிர் கால்படுவதால், பாதத்தில் ஊட்டப் பெற்ற செம்பஞ்சுக்குழம்பு ஆடவரின் கருமையான முடியில் செந்நிறம் படுதலும் உண்டு என்று இலக்கியங்கள் பேசும், 'செஞ்சிலைக் கரத்தர், மாதர் புலவிகள் திருத்திச் சேந்த குஞ்சியர்' (499); 'ஊடலில் கனன்று மறித்த நோக்கியர் மலரடி மஞ்சுளப் பஞ்சி குறித்த கோலங்கள் பொலிந்தில, அரக்கர்தம் குஞ்சி' (4866) என்பன கம்பர் வாக்கு; 'புலந்தவர் கொடியென நடுங்கிப் பொன்னரிச் சிலம்பொடு மேகலை மிழற்றச் சென்னி மேல் அலங்கல்வாய் அடிமலர் அணிந்து. . . . ஏகினாள்' (சிந்தா - 1019) என்ற தேவர் வாக்கும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. புலந்து தலைவர் முடிமீது அடிமலர் வைக்கையல் தலைவியர் இடை நடுங்குவது போலக் கொடிகள் நுடங்கின என்க. தலை முடியின் இயற்கைக் கருநிறம் மாறிச் செந்நிறம் கொண்டு விளங்கும் என்பதைப் 'புதுநிறம் கொடுக்கும்' எனக் குறிப்பிட்டார். நிறம், மென்மை, அழகு ஆகியவற்றால் தாமரை மலர்க்குச் செம்பஞ்சு ஊட்டிய அடிகளும், மெலிவு, நுடக்கம் ஆகியவற்றால் கொடிகட்கு மகளிர் இடையும் உவமம். மகளிர் அடிக்குத் தாமரையும், இடைக்கு வல்லியும் உவமையாக்கப்படுதலின் எதிர்நிலை உவமை அணியாகும். 45 குயில்கள் குரல் ஒடுங்கின | 4193. | 'நீயிர், அன்னவள் குதலையிர்ஆதலின், நேடி, போய தையலைத் தருதிர்' என்று, இராகவன் புகல, தேயம் எங்கணும் திரிந்தன போந்து, இடைத் தேடிக் கூய ஆய், குரல் குறைந்தபோல் குறைந்தன - குயில்கள். |
நீயிர் -'நீங்கள்;அன்னவள் குதலையிர் ஆதலின் -அந்தச் சீதை யின் மழலை போன்ற இனிமையான குரலை உடையவர்களாதலால்;போய தையலை -(சூழ்ச்சியால்) என்னைப் பிரிந்த சீதையை;நேடித் தருதிர் என்று-தேடித் தருவீர்கள்' என்று;இராகவன் புகல -இராமன் (குயில்களை நோக்கிக்) கூற;குயில்கள் -அக்குயில்கள்;தேயம் எங்கணும் -(அதற்கு இணங்கி) எல்லா இடங்களிலும்;திரிந்தன போந்து -திரிந்து வந்து;இடைத் தேடி -அந்தந்த இடங்களில் அவளைத் தேடி;கூய ஆய் -உரக்கக் கூவி அழைத்தனவாய்;குரல் குறைந்த போல -குரல் கம்மின போல; குறைந்தன-(கார்காலத்தில்) குரல் ஒடுங்கின. கார் காலத்தில் குயில் கூவாமை இயல்பு. கார்காலத்தில் குயில் கூவாமை 'ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள்' (4173) என முன் கூறியதாலும் 'கருங்குயில் கையற மாமயில் ஆல' (கார்.நாற்.16) என வருதலாலும் அறியலாம். குதலை - குழந்தைப் பருவத்திற்கே உரியதாயினும் மகளிர்க்கு எல்லாப் பருவத்திலும் பொருந்தியதாகக் கூறுதல் கவிஞர் இயல்பு. பறவையிடம் பேசுவதாகக் |