பக்கம் எண் :

36கிட்கிந்தா காண்டம்

சாபத்தால் பெண் வடிவடைந்த வானர அரசனின் வாலின் அழகைக் கண்டு
மயங்கிய இந்திரன் அருளால் தோன்றியவன் வாலி; கழுத்தின் அழகைக்கண்டு
காதலித்த சூரியன் அருளால் தோன்றியவன் சுக்கிரீவன்.  மதலை - அண்மை
விளி; ஓ - அச்சப்பொருளில் வந்தது; தாம் - அசைச்சொல் தேற்றப்பொருளில்
வந்தது.                                                        2

இராமலக்குவரை அனுமன் அணுகி, மறைய நின்று சிந்தித்தல்

3753.அவ் இடத்து, அவர் மறுகி, அஞ்சி,
     நெஞ்சு அழி அமைதி,
வெவ் விடத்தினை மறுகு
     தேவர், தானவர், வெருவல்
தவ்விட, தனி அருளு தாழ்
     சடைக் கடவுள் என,
'இவ் இடத்து இனிது இருமின்; அஞ்சல்'
     என்று இடை உதவி,

     அவ்இடத்து - அந்தக் குகையில்;அவர் மறுகி -சுக்கிரீவன்,
அமைச்சர் முதலியோர் மனம் கலங்கி;அஞ்சி -பயந்து;நெஞ்சு அழி
அமைதி -
மனவுறுதி இழந்து நிற்கும் சமயத்தில்;வெவ்விடத்தினை -
கொடிய ஆலகால நஞ்சைக்கண்டு;மறுகு -கலங்கிய;தேவர், தானவர் -
தேவர்களும் அசுரர்களும்;வெருவல் தவ்விட- அஞ்சுதல் நீங்கும்படி;தனி
அருளு -
தனித்து வந்து அருள்செய்த;தாழ்சடைக் கடவுளென- தாழ்ந்த
சடையினையுடைய சிவபிரான்போல;இவ் இடத்து இனிது இருமின் -
(வானரர்களை நோக்கி) 'இந்த இடத்தில் இனிதாக இருங்கள்;அஞ்சல் என்று
-
அஞ்ச வேண்டாம்' என்று;இடை உதவி -இடை நின்று ஆறுதல் கூறி;

     வெவ்விடம் - பாற்கடல் கடைந்தபோது வாசுகியால் தோன்றிய ஆலகால
நஞ்சு.  கரிய நிறங்கொண்ட நஞ்சைக் கண்டு அஞ்சிய வானவர்களைப்போலக்
கருநிற வண்ணனாம் இராமமனக் கண்டு வானரர்கள் அஞ்ச, சிவபிரான்
வானவர்களின் துன்பம் நீக்கியது போல அனுமான் அஞ்சற்க என ஆறுதல்
கூறினான். இஃது உவமை அணியாம். தாழ்சடைக் கடவுள் - சிவபிரான்.
'நஞ்சட எழுதலும் நடுங்கி நாண்மதிச் செஞ்சடைக் கடவுளை அடையும்
தேவர்போல' (442) என முன்னரும் கூறப்பட்டுள்ளது. அனுமன் சிவபிரானின்
அம்சம்; ஆதலால் சிவபிரானை அனுமானுக்கு ஒப்பிட்டார்.  'புராரி 'மற்று
யானும் காற்றின் சேய்' எனப்புகன்றான்' (206) என்றது காண்க. அஞ்சல் -
அல்லீற்று வியங்கோள்வினைமுற்று.                               3

3754.அஞ்சனைக்கு ஒரு சிறுவன்,
     அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி, ஒரு
     மாணவப் படிவமொடு,